×

40 தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணா அறிவாலயத்தில் உற்சாக வரவேற்பு

* ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று வாழ்த்து
* வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சான்றிதழை காண்பித்து ஆசி
* கூட்டணிக்கட்சி தலைவர்களும் சந்தித்து நன்றி கூறினர்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் டெல்லி சென்று சென்னை அண்ணா அறிவாலயம் திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வெற்றி பெற்ற வேட்பாளர்களும் சான்றிதழை காண்பித்து ஆசி பெற்றனர். மேலும் கூட்டணி கட்சியின் தலைவர்களும் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 4 தேதி எண்ணப்பட்டது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் வாரி சுருட்டி மீண்டும் வரலாற்று சாதனை படைத்தது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இரு கட்சிகளுமே பல தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. வெற்றி பெற்ற அன்று சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வந்தார். அங்கு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் டெல்லி சென்ற நிலையில், அங்கு சோனியா, ராகுல், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

நேற்று முன்தினம் இரவே அவர் சென்னை திரும்பினார். இந்த நிலையில் நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அறிவாலயம் வந்தார். அவருக்கு அண்ணா அறிவாலயம் நுழைவு வாயிலில் இருந்து தொண்டர்கள் இருபுறமும் திரண்டு நின்று, அவரின் காரின் மீது பூக்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், மேள தாளங்கள் முழங்கவும், பட்டாசு வெடித்தும் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பை காரில் இருந்தவாறு கையெடுத்து கும்பிட்டு ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கம் வரை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவரை பொதுச்செயலாளர் துரைமுருகன் வரவேற்றார். டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு. ஐ.பெரியசாமி, பொன்முடி மற்றும் கனிமொழி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். தொடர்ந்து தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆசி பெற்றனர்.

அப்போது அவர்கள் பூங்கொத்து வழங்கியும், சால்வை அணிவித்தும், புத்தகங்கள் வழங்கியும் முதல்வரிடம் வாழ்த்துகளை பெற்றனர். மக்களவையில் தமிழகத்தின் குரல் ஒலிக்க பாடுபட வேண்டும் என்று அப்போது அறிவுரை வழங்கினார். தொடர்ந்து தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். நீண்ட வரிசையில் நின்று முதல்வரிடம் வாழ்துகளை பெற்றனர். ஒவ்வொருவரும் முதல்வரின் அருகில் நின்று புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

மேலும் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து அளித்து வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், வெற்றி பெற்ற வேட்பாளர்கள் உடன் இருந்தனர். இதே போல திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக சார்பில் எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு, மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான துரை வைகோ, சுப வீரபாண்டியன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். சுமார் 1 மணி நேரம் அவர் அண்ணா அறிவாலயத்தில் வாழ்த்துகளை பெற்றார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் திரண்டதால் அண்ணா அறிவாலயம் உற்சாகத்தில் களை கட்டியது.

The post 40 தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணா அறிவாலயத்தில் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : DMK alliance ,CM ,M.K.Stalin ,Anna Vidyalaya ,Chennai ,Puducherry, Tamil Nadu ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணி நாட்டை வழிநடத்தும்:...