×

பாஜக கோட்டையை தகர்த்தெறிந்த வெற்றி வேட்பாளர்கள்.. 25 வயதில் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் புதுமுக எம்.பி.க்கள்

டெல்லி: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற புதுமுகங்கள் 10பேர் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் காலடி பதித்து ஒடுக்கப்பட்ட மக்களின் கூக்குரல்களை எதிரொலிக்க உள்ளனர். நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பல்வேறு கணிப்புகளை தகர்த்து இந்தியா கூட்டணி 233 தொகுதிகளில் வென்று சாதனை படைத்தது. எனினும் கூட்டணி கட்சிகளுடன் பாஜக ஆட்சியமைக்க முற்பட்டு வருகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் கூக்குரலாக தேர்தலில் வெற்றி பெற்ற 10பேர் முதன்முறையாக நாடாளுமன்றம் செல்ல உள்ளனர். அந்த வகையில் 25 வயதே ஆன சஞ்சனா ஜாதவ் என்ற பட்டியலின இளம்பெண் ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். பாஜக வேட்பாளர் ராம்ஸ்வரு கோலியை எதிர்கொண்ட சஞ்சனா ஜாதவ் 51,983 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வீழ்த்தி வெற்றி கண்டுள்ளார்.

அதேபோல் உத்திரப் பிரதேசத்தில் நஹினா தொகுதியில் சுயேட்சியாக போட்டியிட்ட சமூக ஆர்வலரும், அரசியல்வாதியுமான பட்டியலின வகுப்பை சேர்ந்த சந்திரசேகர் அசாத், பாஜக வேட்பாளர் ஓம் குமாரை 1.51 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். ராவண் என அறியப்படும் அசாத் அமைப்பை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பாஜக கோட்டை என கருதப்பட்ட குஜராத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜெனிபன் தாகூர் என்பவர் சுமார் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பளாரை வீழ்த்தினார். இதன்மூலம் கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வந்த பாஜகவின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் தேர்தலின் போது தனது வேட்பு மனுவை வாபஸ் பெற சொல்லி பாஜகவின் மிகுந்த அழுத்தம் கொடுத்து மிரட்டியதாக அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றில் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் பன்ஸ்வாரா தொகுதியில் காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட்ட பாரத் ஆதிவாசி கட்சியை சேர்ந்த ராஜ்குமார் லோட் என்பவர் பாஜகவின் மகிந்திர சிங்கை 2.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த பாஜகவை ஆட்டம் காண வைத்துள்ளார். தமிழ்நாட்டில் திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில் 5.72 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை சேர்ந்த பொன்.பாலகணபதியை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார்.

இளம் வயதில் நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைக்க உள்ள 27 வயதான இக்ராஸன் என்ற பெண் உத்திரப் பிரதேசத்தின் கைரான தொகுதியில் போட்டியிட்டு பாஜகவின் பிரதீப் குமாரை 59 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். வெற்றிக்கு பின்னர் பேசிய அவர், பாஜகவின் பிரித்தாளும் நடவடிக்கைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கூறினார். மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த விவசாய சங்கத்தலைவர் ராஜ ராஜன் சிங், பீகாரில் நடிகர் பவான் சிங்கை 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி கண்டு முதன்முறையாக நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைக்க உள்ளார்.

ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் தொகுதியில் யாரும் எதிர்பாராத வகையில் சமஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட பட்டியலின வகுப்பை சேர்ந்த அவதேஷ் பிரசாத் என்பவர் பாஜகவின் வேட்பாளர் லல்லு சிங்கை 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து பாஜகவின் கனவை சிதறடித்தார். இதன்மூலம் முதன் முறையாக அவர் நாடாளுமன்றத்தில் கால் பதிக்க உள்ளார்.

The post பாஜக கோட்டையை தகர்த்தெறிந்த வெற்றி வேட்பாளர்கள்.. 25 வயதில் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் புதுமுக எம்.பி.க்கள் appeared first on Dinakaran.

Tags : BJP ,Delhi ,
× RELATED மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல்...