×

1.5 டன் சந்தன கட்டை கடத்திய கேரள கும்பல் அதிரடி கைது: வேன், கார் பறிமுதல்

சேலம்: ஈரோட்டில் இருந்து சேலத்திற்கு 1.5 டன் சந்தன கட்டை கடத்திய கேரள கும்பலை கைது செய்த வனத்துறையினர், வேன் மற்றும் காரை கைப்பற்றினர். சேலம் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு சந்தன கட்டைகள் வாகனங்களில் கடத்தப்படுவதாக மாவட்ட வன அலுவலர் ஹாஸ்யப் ஷஷாங் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். நேற்று மாலை மகுடஞ்சாவடி நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஈரோட்டில் இருந்து சேலத்திற்கு வந்த வேனை மறித்து சோதனையிட்டனர். அதில், சாக்குமூட்டைகள் இருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது சந்தன கட்டைகள் இருந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

இதுதொடர்பாக வேனை ஓட்டி வந்த கேரளாவைச் சேர்ந்த முகமது சுகேல் (34) மற்றும் உடன் வந்த முகமது பசீலூர் ரகுமான் (26) ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர், அவர்களை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், சந்தன கட்டைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்து வேனுடன் 1.5 டன் சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், இந்த கடத்தலில் கேரளாவைச் சேர்ந்த மேலும் 4 பேர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. முகமது சுகேல், முகமது பசீலூர் ரகுமான் ஆகியோர் சிக்கியதும் அவர்கள் காரில் தப்பிச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பதுங்கியிருந்த கேரளாவைச் சேர்ந்த முகமது மிசைல், முகமது அப்ரார், பஜாஸ், உம்மர் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது. சந்தனக் கட்டைகளை 6 பேரும் எங்கிருந்து கடத்தி வந்தனர். இந்த கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பிருக்கலாமா, யாருக்கு கொண்டு சென்றனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து, கைதான 6 பேரையும் நேற்றிரவு சேலம் 6வது குற்றவியல் நடுவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post 1.5 டன் சந்தன கட்டை கடத்திய கேரள கும்பல் அதிரடி கைது: வேன், கார் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Salem ,Erode ,District Forest Officer ,Hashyap ,Salem district ,Kerala ,Dinakaran ,
× RELATED சேலம் அருகே மாட்டை அடித்துக் கொன்றது...