×

கோவை வனத்துறை அதிகாரிகள் அலட்சியம்: குட்டியை தாய் யானை உடன் சேர்க்கும் முயற்சி தோல்வி

கோவை: கோவையில் தாயை பிரிந்த குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்க முடியாமல் கடந்த இரண்டு நாட்களாக வனத்துறையினர் திணறி வருகின்றனர். மேலும், குட்டி யானையை பிடித்து அதனை துன்புறுத்தி வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட மருதமலை அடிவாரம் வனப்பகுதியில் 13 எண்ணிக்கையிலான யானைகள் கூட்டம் தொடர்ந்து சுற்றி வருகிறது. இந்த யானை கூட்டம் அடிக்கடி வனத்தில் இருந்து வெளியேறி விவசாய நிலத்தில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த யானை கூட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் தவறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், விவசாயிகளும் வனத்துறையினர் சரிவர கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதில்லை என தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 30-ம் தேதி மருதமலை வனப்பகுதியில் ரோந்து பணிக்கு சென்ற வனத்துறையினர் யானையின் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தனர். அப்போது, 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு கீழே படுத்து கிடந்ததை கண்டறிந்தனர். இந்த யானை அருகே 3 மாத குட்டி யானையும் இருந்தது. இப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை பல மணி நேரமாக சத்தம் போட்டு வந்தது. ஆனால், இரவு நேரத்தில் கண்டுக்கொள்ளாமல் விட்ட வனத்துறையினர், பகல் நேரத்தில் வனத்திற்குள் சென்று யானையை பார்த்தனர். இந்த யானை 13 யானைகளின் கூட்டத்தை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சம்பவ இடத்திற்கு மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், ரேஞ்சர்கள் திருமுருகன், அருண் மற்றும் வன கால்நடை டாக்டர்கள் சுகுமார், ராஜேஸ் குமார் ஆகியோர் சென்றனர்.

யானையை கிரேன் உதவியுடன் எழுந்து நிற்க வைத்து தொடர் சிகிச்சை அளித்தனர். அப்போது, தாய் யானையை பிரியாமல் 3 மாத குட்டி யானை அதன் அருகிலேயே இருந்தது. தொடர் சிகிச்சையால் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும், தாய் யானையுடன் இருந்து வந்த குட்டி யானை கடந்த 1-ம் தேதி அதிகாலை தாயை விட்டு பிரிந்து, தனது சகோதர யானையுடன் வனத்திற்குள் சென்றது. மேலும், கடந்த 2-ம் தேதி வனத்திற்குள் சென்ற குட்டியானை தாய் யானையை சந்தித்து மீண்டும் தனது கூட்டத்துடன் சேர்ந்ததாக வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதவிர, டாக்டர் குழுவினர் அளித்த 4 நாள் சிகிச்சையால் தாய் யானை உடல்நலம் குணமாகியது. பின்னர், வனத்துறையினர் கிரேன் பிடியில் இருந்த பெண் யானையை வனத்தில் விடுவித்தனர்.

அந்த யானை தனது குட்டி யானை மற்றும் கூட்டத்தை தேடி வனத்திற்குள் சென்றது. அப்போது, முதல் வனத்துறையினர் தாய் யானையை குட்டியானையுடன் சேர்க்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், தற்போது வரை சேர்க்க முடியவில்லை. தாய் யானை மற்றும் குட்டி யானையை டிரோன் மூலமாகவும், 25-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மூலமாகவும் கண்காணித்து வருவதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், வனத்துறையின் கவனக்குறைவு மற்றும் அலட்சியம் காரணமாக கண்காணிக்கப்பட்டு வந்த குட்டி யானை வேறு ஒரு யானை கூட்டத்துடன் சேர்ந்து காணாமல் போனது. இந்த குட்டி யானை நேற்று காலை விராலியூர் அடுத்த பச்சான்வயல் என்ற இடத்தில் இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு ஜீப்பில் ஏற்றி கோவை மருதமலை வனப்பகுதி அருகே உள்ள யானை மடுவு கொண்டு சென்றனர்.

அங்கு தாய் யானையுடன் குட்டி யானையை சேர்க்க முயற்சி செய்து வருகின்றனர். வனத்துறையினர் குட்டி யானையை கயிறு போட்டு இழுத்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. வனத்துறை அல்லாத பலரை வனத்திற்குள் அழைத்து சென்று அவர்கள் மூலம் புகைப்படம், வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பரபரப்பி வருகின்றனர். விளம்பரத்திற்காக வனத்துறையினர் செய்து வரும் இந்த செயலால் தற்போது குட்டியானையை தாய் யானையுடன் சேர்க்க முடியாமல் இருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர். மேலும், குட்டி யானை நடமாட்டத்தை சரியாக வனத்துறையினர் கண்காணித்து இருந்திருந்தால் தாய் யானையுடன் அதனை சேர்த்து இருக்கலாம் என வனஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே தோல்வியில் குட்டியானை ஆபரேஷன்
கோவை பெரியநாயக்கன்பாளையம் கோவனூர் பகுதியில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தாயை பிரிந்த மூன்று மாத குட்டியானை கண்டறியப்பட்டது. இந்த குட்டியானையை மீட்ட வனத்துறையினர் அதனை ஒரு யானை கூட்டத்துடன் சேர்க்க முயற்சி செய்தனர். இதற்காக அவர்கள் பல்வேறு நடவடிக்கை எடுத்த நிலையில், அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தது. பின்னர், அந்த குட்டியானையை வனத்துறையினர் பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானை முகாமிற்கு கொண்டு சென்று பராமரித்து வருகின்றனர். இதே நிலை தற்போது உள்ள குட்டி யானைக்கும் வரலாம் என கூறப்படுகிறது.

The post கோவை வனத்துறை அதிகாரிகள் அலட்சியம்: குட்டியை தாய் யானை உடன் சேர்க்கும் முயற்சி தோல்வி appeared first on Dinakaran.

Tags : Coimbatore Forest Department ,Coimbatore ,Marudamalai ,Coimbatore forest ,
× RELATED கோவை மருதமலை வனப்பகுதியில் குட்டியை...