×

17வது மக்களவையைக் கலைத்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவு

டெல்லி: இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை தேர்தல் நடைபெற்று கடந்த ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி கட்சிகளும், பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் நேரடியாக மோதின.

மத்தியில் ஆட்சியமைக்க 272 இடங்களைக் கைப்பற்றியிருக்க வேண்டும். பாஜக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளதால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடியது. அதில் அமைச்சரவையைக் கலைக்க பரிந்துரைக்கப் பட்டதையடுத்து மோடி ஜனாதிபதி திரௌபதி முர்முவை அவரது இல்லத்தில் சந்தித்து மக்களவையைக் கலைக்கும் தீர்மானத்தையம், தனது ராஜினாமா கடிதத்தையும் அளிததார்.

பின்னர் அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று 17வது மக்களவையை ஜனாதிபதி திரௌபதி முர்மு கலைத்தார் என்று ராஷ்டிரபதி பவனில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் “இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 17வது மக்களவையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்குமாறு குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அதன்படி அமைச்சரவையின் ஆலோசனையை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர், அரசியலமைப்புச் சட்டத்தின் 85வது சரத்து உட்பிரிவு 2 மூலம் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி 17வது மக்களவையைக் கலைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கிடைத்ததால் மீண்டும் இன்றே ஜனாதிபதியை மோடி நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post 17வது மக்களவையைக் கலைத்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : President ,Trelapati Murmu ,Delhi ,Congress ,India Alliance ,
× RELATED போலி செய்திகள் பேரழிவை உருவாக்கும்: துணை ஜனாதிபதி கவலை