விஜயவாடா: தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் உள்ளேன் என தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தெலுங்குதேசம் 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் பாஜக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்லும் முன் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி.
இதுபோன்ற தேர்தலை நான் வரலாற்றில் பார்த்ததில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்து தேர்தலில் வாக்களித்துவிட்டு சென்றனர். மாநிலத்தை விட்டு வெளியே இருந்தவர்கள் கூட இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். ஆந்திர மாநிலம், தெலுங்கு தேச கட்சி வரலாற்றில் பொன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டிய வெற்றி. 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளோம். எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை கூட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெறவில்லை. ஆந்திராவில் 30 ஆண்டுகால சேதங்களை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளார் ஜெகன்மோகன்.
கடந்த 5 ஆண்டுகளாக ஆந்திராவில் அரசு நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை. மக்களுக்கு சேவை செய்ய அதிகாரத்திற்கு வரும்போது பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. பல தூக்கமில்லா இரவுகள், கடுமையான நெருக்கடியை கடந்து வந்துள்ளேன். இத்தனை நெருக்கடியில் இருந்தும் மக்கள் என்னை காப்பாற்றி இருக்கிறார்கள். மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் உள்ளேன்.
தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி செல்கிறேன். NDA கூட்டணியில் ஒரு அங்கமாக நாங்கள் இந்த வெற்றியை பெற்றுள்ளோம். தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா கட்சி இணைந்து பணியாற்றியதால் இந்த வெற்றி கிடைத்தது இவ்வாறு கூறினார்.
The post தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் உள்ளேன்: தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பேட்டி appeared first on Dinakaran.