×

மழை வேண்டி பிரார்த்தனை; அரசு – வேம்புக்கு திருமணம்

 

பல்லடம், ஜூன் 5: பல்லடம் அருகே அம்மாபாளையத்தில் மழை வேண்டி அரச மரம் – வேம்பு மரத்திற்கு திருமணம் நடத்தி அப்பகுதி மக்கள் நேற்று பிரார்த்தனை செய்தனர். பல்லடம் அருகேயுள்ள அம்மாபாளையம் கிராமத்தில் ஆதி விநாயகர், மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மழை வளம் வேண்டியும், விவசாயம் மற்றும் தொழில் வளம் சிறக்கவும் வேண்டி அரச மரம், வேம்பு மரத்திற்கு திருக்கல்யாணம் நடந்தது.

முன்னதாக கோவில் தல விருட்சங்களாக உள்ள அரச மரம், வேம்பு மரங்கள் அம்மையப்பராக பாவித்து அலங்கரிக்கப்பட்டன. தொடர்ந்து, மாகாளியம்மன் கோவிலில் இருந்து வள்ளி தெய்வானை அழைத்து வரப்பட்டனர். பெண் கேட்கும் நிகழ்வை தொடர்ந்து முருகப் பெருமான் மற்றும் வேல் ஆகியவை விநாயகர் கோவிலுக்கு எடுத்துவரப்பட்டன.

ஆதி விநாயகர் கோயிலில் அரசு – வேம்புக்கு திருக்கல்யாணம் நடந்தது. பட்டு வேட்டி, பட்டு புடவை, வளையல், தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு என சீர்வரிசைகள் எடுத்து வர, முருகப்பெருமானுக்கு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க அரச மரம், வேம்பு மரத்திற்கு திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாண நிகழ்வின் போது, 3 கருடன்கள் வானத்தில் ஒருசேர வட்டமிட்டன. பக்தர்கள் அனைவரும் அரோகரா கோஷம் முழங்க இறைவனை வழிபட்டனர்.

The post மழை வேண்டி பிரார்த்தனை; அரசு – வேம்புக்கு திருமணம் appeared first on Dinakaran.

Tags : Palladam ,Ammapalayam ,Adi Vinayagar ,Magaliyamman ,Palladam.… ,
× RELATED புகையிலை பொருட்கள் பறிமுதல்