திருப்புவனம், ஜூன் 5: வைகை ஆற்றுப்பாசன பகுதி திருப்புவனம் பகுதியாகும். வைகை ஆற்றின் வலது மற்றும் இடது பிரதான கால்வாய்கள் மூலம் திருப்புவனம், மாரநாடு, பிரமனூர், பழையனூர் உள்ளிட்ட கண்மாய்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. எனவே கால்வாயின் இருபுறமும்,ரோட்டை ஒட்டியும் பல இடங்களில் சாரநெத்தி, யானை நெருஞ்சி, கீழாநெல்லி, உள்ளிட்ட மூலிகை மருத்துவத்திற்கு பயன்படும் செடிகள் ஏராளமானவைகள் வளர்ந்துள்ளன.
மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றிற்கு கூலி தொழிலாளர்கள் பலரும் செடிகள், வேர்கள், காய்கள் உள்ளிட்டவற்றை பறித்து சென்று விற்பனை செய்கின்றனர். செடிகள், வேர்களின் தன்மையை பொறுத்து ஒரு கிலோ 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்குகின்றனர். சக்குடி தொழிலாளி கூறுகையில், மழை காலங்களில் கால்வாய்கள், கண்மாய் கரைகள், சாலையோரங்களில் செடிகள் அதிகமாக வளரும்.
சில நாட்கள் கழித்து சென்று பறிக்கலாம். பெரும்பாலும் சாரநெத்தி, யான நெருநெருஞ்சி, கீழாநெல்லி செடிகளை விரும்பி வாங்குவார்கள். இரண்டு பேர் சேர்ந்து நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 கிலோ வரை சேகரிப்போம். நாள் ஒன்றுக்கு பத்து கி.மீ தூரம் வரை நடந்தே செல்வோம். தினசரி சேகரித்த செடிகளை காயவைத்து உலர்த்தி பின் வாரம் ஒரு முறை மதுரை சென்று விற்பனை செய்வோம். மழை இல்லாவிட்டால் செடிகள் கிடைக்காது என்றார்.
The post திருப்புவனம் பகுதியில் மூலிகை வேர்கள் சேகரிக்கும் பணியில் தொழிலாளர்கள் appeared first on Dinakaran.