×

தேனியில் 28 ஆண்டுக்கு பின் திமுக சாதனை வெற்றி: மீண்டும், மீண்டும் டிடிவி தோல்வி

தேனி: தேனி நாடாளுமன்ற தொகுதியில் திமுக எம்.பியாக 1996ம் ஆண்டு ஞானகுருசாமி வெற்றி பெற்றார். இதன் பின்பு இந்தத் தொகுதி இரு முறை கூட்டணியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த தேர்தலில் ஓபிஎஸ் மகனும், அதிமுக வேட்பாளருமான ரவீந்திரநாத், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வீழ்த்தி எம்பி ஆனார். இம்முறை இங்கு திமுக நேரடியாக களமிறங்கியது. மாவட்டச் செயலாளரான தங்க தமிழ்செல்வன் திமுக வேட்பாளராக போட்டியிட்டார்.

இவர் 5,71,493 வாக்குகள் பெற்றார். அமமுக வேட்பாளராக போட்டியிட்ட டிடிவி.தினகரன் 2,92,669 பெற்றார். அதிமுக வேட்பாளர் நாராயணசாமி 1,55,587 வாக்குகள் பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் டிடிவி.தினகரனை 2,78,824 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்க தமிழ்செல்வன் வெற்றி பெற்றுள்ளார். சுமார் 28 வருடங்கள் கழித்து திமுக சாதனை படைத்து வெற்றியை ஈட்டி உள்ளது. தேனியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கும் போதே, அதிமுக மற்றும் அமமுகவில் வாக்கு எண்ணிக்கை முகவர்களாக இருந்த கட்சியினர் மெல்ல நடையை கட்ட தொடங்கினர்.

குறிப்பாக ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, போடி தொகுதியில திமுக ஆரம்பம் முதலே அதிக வாக்குகளை பெற ஆரம்பித்தது. இதனால் இனி உட்கார முடியாது என்பது போல் வெளியேற தொடங்கினர். தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த டிடிவி.தினகரன், கடந்த 2004ம் வருடம் இதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆருணிடம் தோல்வி அடைந்தார். தற்போது 20 வருடத்திற்கு பின் திமுக சார்பில் போட்டியிட்ட தங்கதமிழ்செல்வனிடம் தோல்வியை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தேனியில் 28 ஆண்டுக்கு பின் திமுக சாதனை வெற்றி: மீண்டும், மீண்டும் டிடிவி தோல்வி appeared first on Dinakaran.

Tags : DMK ,Theni ,TTV ,Gnanagurusamy ,Congress party ,OPS ,AIADMK ,Rabindranath ,Congress ,Dinakaran ,
× RELATED தேனி எம்பி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்