×

தமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வாரி சுருட்டியது: அதிமுக, பாஜ கூட்டணிகளுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றிபெற்று மொத்தமாக வாரி சுருட்டியது. அதிமுக மற்றும் பாஜ கூட்டணிகளுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. இரு கட்சிகளுமே பல தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளன. நாட்டின் 18வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் கடந்த 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. நாடு முழுவதும் 96 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், 64 கோடி பேர் ஜனநாயக கடமையை ஆற்றி இருந்தனர். நாடு முழுவதும் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

தமிழ்நாட்டில் தபால் வாக்கு முடிந்து காலை 8.30 மணிக்கு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. காலை 9 மணியில் இருந்து முன்னணி நிலவரம் தெரியவந்தது. ஆரம்பம் முதலே திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னணியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் முதல் சுற்றில் இருந்தே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார். 11வது சுற்று முடிவில் சுமார் 2 லட்சம் வாக்குகள் முன்னணி பெற்றிருந்தார். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி சுமார் 2.83 லட்சம் வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தபால் ஓட்டு மற்றும் அனைத்து சுற்றிலும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காஞ்சிபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செல்வம் முன்னிலை பெற்றார். தென்காசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ராணி வெற்றி பெற்றார். சேலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செல்வகணபதி வெற்றி பெற்றார். அதேபோல தமிழகம் சார்பில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

அதன்படி, தமிழகத்தில் திமுக போட்டியிட்ட 21 தொகுதி, காங்கிரஸ் 9, மார்க்சிய கம்யூனிஸ்ட் 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் 2 தொகுதி, விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதி, மதிமுக 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 ஆகிய 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதேபோன்று புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிட்ட ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த இடத்தில் அதாவது 2 இடத்திற்கு அதிமுக, பாஜ வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவியது.

திமுகவுக்கு அடுத்த பெரிய கட்சி அதிமுக கட்சி என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழகத்தில் பாஜ கூட்டணியில் போட்டியிட்ட பல தலைவர்கள் 2வது இடத்துக்கு வந்துள்ளனர். சில இடங்களில் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதேபோன்று, சில இடங்களில் அதிமுக மற்றும் பாஜ வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக வேட்பாளரும் விஜயகாந்த் மகனுமான விஜய் பிரபாகரன் போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் சில சுற்றுகளில் முன்னணியில் வகித்து வந்தார். ஆனால் முன்னணி நிலவரம் மாறி மாறி வந்தது. இறுதியில் விருதுநகர் தொகுதியையும் திமுக கூட்டணியான காங்கிரஸ் கைப்பற்றியது.

அதேபோன்று திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முதலில் முன்னணியில் இருந்தாலும் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்தார். தர்மபுரியில் பாஜ கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி குறைந்த அளவில் தொடர்ந்து முன்னணியில் இருந்தார். இறுதியில் சுமார் 19 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஆ.மணியிடம் தோல்வி அடைந்தார். அதேபோல, பாஜவில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தார். தென் சென்னையில் தமிழிசை, வேலூரில் ஏ.சி.சண்முகம், தேனியில் டிடிவி.தினகரன், பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம், பெரம்பலூரில் பாரிவேந்தர், சிவகங்கை தொகுதியில் தேவநாதன் யாதவ், விருதுநகரில் ராதிகா ஆகியோரும் தோல்வி அடைந்தனர்.

இதன்மூலம் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி அமைத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்று அனைத்து தொகுதிகளையும் வாரி சுருட்டி சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் தென்இந்தியாவில் பாஜவை எதிர்த்து களம் கண்டு அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்ற முதல் மாநிலம் தமிழகம் என்ற சாதனையையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ளார். இந்த வெற்றிமூலம் வடஇந்திய தலைவர்கள் அனைவரின் கவனத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. தென் மாநிலங்களில் கேரளாவில் கூட பாஜ கால் பதித்துள்ளது. ஆனால் தமிழகத்தில்தான் பாஜ தனித்தோ அல்லது அந்த கட்சியின் தலைமையிலான கூட்டணியோ ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post தமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வாரி சுருட்டியது: அதிமுக, பாஜ கூட்டணிகளுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Puducherry ,Dimuka Coalition ,Adimuka ,Baja ,Chennai ,Dimuka alliance ,Atamuga ,Bajah ,Tamil Zhagam ,Dinakaran ,
× RELATED சென்னையில் கூடிய பாஜக மையக்குழு...