×

ஜில் ஜில் ஜிகர்தண்டா இது வெயிலுக்கு வேற லெவல்

நன்றி குங்குமம் தோழி

அடிக்கிற வெயிலுக்கு டக்குன்னு ஞாபகம் வரும் விஷயங்களில் ஒன்று மதுரை புகழ் ஜிகர்தண்டா. ஜிகர்தண்டாவில் பாலேடு, சர்க்கரை, நன்னாரி, கடல்பாசி, பால்கோவா, ஐஸ்க்ரீம் போன்றவை சேர்க்கப்பட்டு தயாராகிறது. சமீபகாலமாய் தயாராகும் ஜிகர்தண்டாவில் கடல்பாசிக்குப் பதிலாக பாதாம் பிசின் சேர்க்கிறார்கள்.

“ஜிகர் என்றால் இதயம். தண்டா என்றால் குளுமை.” அதாவது, இதயத்தையும் சேர்த்தே குளுமைப்படுத்துகிற பானம் என்பதால் ஜிகர்தண்டா என்கிற பெயர் உருவானதாகச் சொல்லப்படுகிறது. ஜிகர்தண்டா வடக்கிலிருந்து வந்த பானம் என்றாலும், பெயரை மட்டும் வைத்துக்கொண்டு, இதன் மூலப்பொருட்களை இங்குள்ள மக்களின் உடல் நலனுக்கு ஏற்ப மாற்றி மதுரையில் அறிமுகமான பானம் என்றே சொல்லலாம்.

மதுரை மாநகரின் எந்தப் பக்கம் சென்றாலும் ஏதேனும் ஒரு ஜிகர்தண்டா கடையை பார்க்காமல் நம்மால் கடக்க முடியாது. கடந்த 600 ஆண்டுகளாய் மதுரை மண்ணின் வரலாற்றோடும், வாழ்வோடும் பின்னிப் பிணைந்து கிடக்கிற ஜிகர்தண்டாவை நினைக்கும்போதே நமது நாவிலும் நீர் சுரக்கும். மதுரை வரும் வெளிநாட்டவரும் சுவைக்க நினைக்கிற உற்சாகம் மிக்க பானமாக, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகும் ஜிகர்தண்டாவின் வரலாறு, இந்த பானத்தைப் போன்றே சுவை மிகுந்தது.

கடல் மார்க்கமாக வணிகம் செய்வதற்காக தமிழகம் நோக்கி வந்த வியாபாரிகள் வணிக நோக்கத்தில் தங்கும் ஒரு நகரமாக, தூங்கா நகரமான மதுரை இருந்திருக்கிறது எனலாம். அவ்வாறு வந்த வெளிநாட்டவர்களின் பலவகையான உணவுகள் மதுரை மாநகருக்குள் புழங்கியதாகவும் சொல்லப்படுகிறது.பாண்டியர்களின் ஆட்சிக்குப் பிறகு முகலாயர்களின் வம்சாவளியான சுல்தானேட் என்கிற இஸ்லாமியர்களின் ஆட்சி இருந்திருக்கிறது. பிறகு நாயக்கர்களின் ஆட்சிக்காலமும் நடந்துள்ளது.

இவர்களது ஆட்சிக்காலத்தில்தான் ஜிகர்தண்டா என்கிற பானம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று ஜிகர்தண்டா மதுரைக்குள் நுழைந்தது குறித்து ஒருசில வரலாற்று ஆசிரியர்களால் சொல்லப்படுகிறது. கி.பி. 1311ம் ஆண்டுக்குப் பிறகு ஜலாலுதீன் ஆக்சன் ஹான் என்பவரே மதுரையை ஆண்ட முதல் சுல்தானாகக் கருதப்படுகிறார். இவரது காலத்தில்தான் அரச குடும்பத்தவர்களுக்காக தயாரிக்கப்பட்ட ராஜ பானமாக ஜிகர்தண்டா இருந்திருக்கிறது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்களில் சிலர்.

முகலாயர்கள் காலத்தில் பல்வேறு உணவுகள் அவர்களின் சுவைக்கு உருவாக்கப்பட்டு இந்தியாவிலும் அறிமுகமானது. காலப்போக்கில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கும் அவை வந்திருக்கிறது. அப்படியாக முகலாயர்கள் மூலம் வந்ததே ஜிகர்தண்டா பானம் என்கிற கருத்தும் நிலவுகிறது. ஜிகர்தண்டாவின் வேர் சொல் உருது அல்லது ஹிந்துஸ்தானியில் இருப்பதால் இஸ்லாமியர்களின் ஆட்சிக்காலத்தில் மதுரையில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

பிற்கால பாண்டியர்கள் காலத்தில் பெர்ஷியாவில் இருந்து வந்து வணிகம் செய்த அரேபியர்கள் மூலமாகத்தான் ஜிகர்தண்டா அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் என்கிற கருத்தையும் சில வரலாற்று ஆசிரியர்களும், தொல்லியல் ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர்.ஜிகர்தண்டாவின் வரலாறு தெளிவாக இல்லாத போதும் பின்னாளில் இது மதுரை மக்களின் விருப்பமான பானமாக உருவாக ஆரம்பித்தது என்றே சொல்லலாம்.

காரணம், ஜிகர்தண்டாவை குடித்தால், கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும் என்பதைத் தாண்டி, உடலுக்கு பலத்தையும், புத்துணர்ச்சியையும் தருகிறது என்ற கருத்து மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக ஆரம்பித்தது. புராண இதிகாசங்களில் பலசாலிகளாக உருவகப்படுத்தப்பட்ட பீமன் மற்றும் அனுமன் படங்கள் ஜிகர்தண்டா விற்பனை பெயர் பலகைகளை அலங்கரித்தன.

தற்போது மதுரையில் மட்டுமே 300க்கும் மேற்பட்ட ஜிகர்தண்டா கடைகள் இயங்கி வருகிறது. இங்கிருந்து சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பெரும்பாலும் இஸ்லாமியர்கள்தான் ஜிகர்தண்டா கடைகளை பல தலைமுறைகளாகத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே பல்வேறு கிளை பரப்பி மதுரை முழுவதும் பரவியிருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். இந்தக் கடைகள் மூலமாக தினமும் நடைபெறுகின்ற வியாபாரம், மதுரை நகர பொருளாதாரத்திலும் முக்கிய பங்காற்றுகிறது என்கின்றனர் மதுரை வணிகர் சங்க நிர்வாகிகள்.

ஜிகர்தண்டா தொழிலை பலர் செய்தாலும், இது மதுரை மக்களின் அடையாளம் என்கிற அடைமொழியுடன், ஜில்லென்ற சுவையோடு ஜில் ஜில் ஜிகர்தண்டாவாக இதனை மாற்றி, பலரின் மனதிலும் கொண்டு சேர்த்த பெருமை “ஃபேமஸ் ஜிகர்தண்டா” நிறுவனத்தையும், அதை உருவாக்கிய ஷேக் மீரானையுமே சேரும்.பகல் விற்பனையில் மட்டுமே இருந்த ஜிகர் தண்டாவை இரவு விற்பனைக்கு ஷேக் மீரான் மாற்றியதுடன், ஜிகர்தண்டாவின் விலையை அதிரடியாகக் குறைத்து, ஜிகர்தண்டாவில் பாஸந்தியை கூடுதலாய் இணைத்து, இதன் சுவையை கூடுதலாக்கி விற்பனை செய்யத் தொடங்கினார். ஷேக் மீரானின் ஜிகர்தண்டா தயாரிப்பு சுவை பிடித்துப்போன மதுரை மக்கள், அவரின் தள்ளுவண்டிக் கடையை தினமும் தேடித்தேடி வந்து வாங்கி சுவைக்கத் தொடங்கினர்.

1977ல் மதுரை விளக்குத்தூண் பகுதிகளில் தள்ளுவண்டியில் வைத்து ஜிகர்தண்டா விற்பனை செய்யப்பட்டுள்ளது. அப்போது சாதாரண ஜிகர்தண்டா கிளாஸ் ஒன்றுக்கு 20 பைசாவும், ஸ்பெஷல் ஜிகர்தண்டா கிளாஸ் ஒன்றுக்கு 30 பைசா எனவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாளடைவில் ஷேக் மீரானின் தள்ளுவண்டி ஜிகர்தண்டாவிற்கு மக்களின் பேராதரவு கிடைக்கத் தொடங்கியவுடன், தள்ளுவண்டியில் இருந்த தனது விற்பனையை சிறிய விற்பனை நிலையத்திற்கு மாற்றினார்.

பாய்கடை ஜிகர்தண்டா என்ற பெயரில் இருந்து “ஃபேமஸ் ஜிகர்தண்டா” என்ற பெயரை மதுரை மக்களே ஷேக் மீரானின் ஜிகர்தண்டா விற்பனை நிலையத்திற்கு சூட்டத் தொடங்கினர். ஃபேமஸ் ஜிகர்தண்டா இன்று நூற்றுக்கணக்கான பிரான்சைஸ்களுடன் மிகப் பிரமாண்டமாக கிளை பரப்பி செயல்பட்டாலும், மதுரை விளக்குத்தூண் டிராபிக் சிக்னல் அருகேயுள்ள ஃபேமஸ் ஜிகர்தண்டாதான் ஒரிஜினல் ஜிகர்தண்டா கடையாக இன்றும் செயல்படுகிறது.

ஃபேமஸ் ஜிகர்தண்டாவின் பொது மேலாளர் முகமது மீரானிடம் பேசியதில், ‘‘எனது தாத்தா ஷேக் மீரான் தூத்துக்குடியில் விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். குடும்ப வறுமை காரணமாக கிராமத்தை விட்டு நகரம் நோக்கி பொருளாதாரம் ஈட்டக் கிளம்பியவர், 1970களில் மதுரை வந்து சிறிய அளவில் ஐஸ்க்ரீம் விற்பதற்கான முயற்சிகளில் இறங்கினார். தாத்தா விற்ற ஐஸ்க்ரீம்களின் தரமும், அவர் வாடிக்கையாளர்களை அணுகிய விதமும் மக்களிடம் அவருக்கு பாய்கடை ஐஸ் என்கிற அடைமொழியோடு பேராதரவைப் பெற்றுத் தந்தது. கலர் கலரான ஐஸ்க்ரீம்களை விற்றுவந்தவர், தொழிலை விரிவுபடுத்த நினைத்து, கூடுதலாக ஜிகர்தண்டா விற்பனையிலும் இறங்கினார். இன்று எனது தாத்தா உருவாக்கிய ஃபேமஸ் ஜிகர்தண்டா மதுரை மக்களின் பேராதரவுடன் மதுரையின் அடையாளமாகவே மாறி நிற்கிறது.

வடஇந்தியாவில் தயாரிக்கப்படும் ஜிகர்தண்டாவுக்கும், மதுரையில் தயாரிக்கப்படும் ஜிகர்தண்டாவுக்கும் வேறுபாடுகள் அதிகம் உண்டு. மதுரை ஜிகர்தண்டாவில் கடல்பாசி பயன்படுத்தப்படுகின்ற காரணத்தாலேயே தனிச்சிறப்பு உருவானது. அதுமட்டுமின்றி நன்னாரி சர்பத்திற்குப் பயன்படுத்தக்கூடிய செடிகள் மதுரையைச் சுற்றி பல்வேறு மலைஅடிவாரங்களில் விளைகிறது.

மருத்துவக் குணமிக்க இந்த மூலிகைகள் எவ்வளவு வெப்பம் நமது உடலை தாக்கினாலும், உடல் சூட்டைக் குறைத்து, வெப்பத்தை சமன்படுத்தக்கூடிய தன்மை கொண்டவை என்பதே மதுரை ஜிகர்தண்டாவின் வெற்றிக்குக் காரணம்’’ என்கிறார் மிகவும் அழுத்தமாக மதுரைக்கு மல்லிகை எப்படி ஒரு அடையாளமோ, அப்படித்தான் நினைக்கும்போதே உள்ளம் குளிரச் செய்யும் மதுரை ஜிகர்தண்டாவும்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post ஜில் ஜில் ஜிகர்தண்டா இது வெயிலுக்கு வேற லெவல் appeared first on Dinakaran.

Tags : Jill Jill Gigardanta ,SAFFRON COMPANION ,MADURA ,Jil Jil Gigardanta ,
× RELATED நாவல் பழம் பறிக்க மாடி மீது ஏறிய அரசு...