×

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* பூரி மாவில் தண்ணீருக்கு பதில் பால் சேர்த்து ஊறவைத்தால் சுவையாக இருக்கும்.

* உப்பு, மஞ்சள், எலுமிச்சை சாறு, வெள்ளம் சேர்த்து 30நிமிடம் ஊறவைத்தால் பாகற்காய் கசக்காது.

* வடை எண்ணெய் உறியாமல் இருக்க வெந்த உருளைக்கிழங்கு மசியலை சேர்க்கவும். ம.வசந்தி, திண்டிவனம்.

* துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன் வரமிளகாய், பூண்டு, கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால் பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்!!!

* தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அரைத்து ஊற்றவும் குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்!!!

* உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்க வேண்டும்.இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்!

* தோசைக்கு மாவு ஆட்டும்போது ஒரு கைப்பிடி ரவை சேர்த்து அரைத்தால் தோசை வார்க்கும்போது நன்கு சிவந்து மொறுமொறுவென வரும். சாப்பிடவும் சுவையாக இருக்கும். நாகஜோதி கிருஷ்ணன், சென்னை.

*மெதுவடை மொறு மொறுவென்று இருக்க, உளுத்தம் பருப்புடன் கொஞ்சம் பச்சரிசி சேர்த்து ஊற வைத்து அரைத்தால் நன்றாக இருக்கும்.

*கீரை சமைக்கும்போது சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் கீரையின் நிறம் மாறாது.

*சாதம் வடிக்கும் போது குழைந்து விட்டால் உடனே சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்தால் குழையாமல் இருக்கும்.

*கேழ்வரகை ஊறவைத்து அரைத்து பால் எடுத்து அல்வா போன்று செய்யலாம். அதிக ருசியும், ஆரோக்கியமும் இருக்கும்.எம்.ஏ.நிவேதா, திருச்சி.

*கடலைப் பருப்பை சில மணி நேரங்கள் ஊறவைத்து, நீரை வடித்து விட்டு, நிழலில் காயவைத்து, காயும் எண்ணெயில் பொரித்து, உப்பு, காரப்பொடி தூவினால் சுவையான, சத்தான நொறுக்கு தீனி தயார்.

*வறுவல்களில் மிளகாய் தூளுக்கு பதில் மிளகுப் பொடியோ, பருப்பு பொடியோ தூவலாம். சுவை கூடுவதுடன் உடம்புக்கும் நல்லது.

* புளியோதரைக்கு சாதம் செய்யும் போது 2, 3 ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்தால் சாதம் உதிர் உதிராக வரும்.

* துவையல்களில் புளிக்கு பதிலாக மாங்காய் துருவல், தக்காளி சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும். உடம்புக்கும் நல்லது- எஸ்.ராஜம், ஸ்ரீ ரங்கம்.

* பாதுஷாவுக்கு பிசைந்த மாவு மீதி இருந்தால், அதில் பச்சை மிளகாய், வெங்காயம் இவற்றை அரைத்து கலந்து உப்பு சேர்த்து பிசைந்து விருப்பமான வடிவங்களில் தட்டி பொரித்தெடுத்தால் உப்பு பிஸ்கெட் தயார்.

* பிசைந்த சப்பாத்தி மாவு மீதம் இருந்தால் மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி, காற்றுபுகாத டப்பாவில் வைத்து இறுக மூடி வைத்து விட்டால் 3, 4 நாட்கள் புதிதாக, வறண்டு போகாமல் இருக்கும்.

* கீரைகள், காய்கறிகளை கிரைண்டரில் குழவியை எடுத்து விட்டு அதில் வைத்தால் வாடாமல், வதங்காமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

* சுண்டைக்காய், மணத்தக்காளி வற்றல்களை கைவசம் வைத்திருந்தால் காய்கறிகள் இல்லாதபோது பயன்படுத்தலாம். உடம்புக்கும் நல்லது. ஆர்.பத்மப்ரியா, திருச்சி.

* இரண்டு கெட்டி மாங்காயை தோலோடு குக்கரில் வைத்து 2 விசில் விட்டு வேகவைத்து, ஆறியதும் தோலுரித்து கைகளால் நன்றாக மசிக்கவும். பின் 4 கப் குளிர்ந்த நீர், கால் கப் சர்க்கரை, 1 ஸ்பூன் கருப்பு உப்பு,ஏலக்காய் தூள், சாட் மசாலா இரண்டும் தலா கால் ஸ்பூன் சேர்த்து நன்றாகக் கலந்து பருக உடலுக்கு மிகவும் நல்லது.

* உங்கள் வீட்டு டீ மணக்க ஒரு யோசனை. டீத்தூளை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து, இஞ்சி, ஏலக்காய் போட்டுக் கொதிக்க வைக்கவும். டீ மணம் ஊரையே கூட்டி விடும். அளவான பால், சர்க்கரை சேர்த்துக் குடித்தால் சாப்பாடே தேவையிருக்காது.

* சாம்பார், ரசம் இவை மீதி இருந்தால் அவலை களைந்து அதில் ஊற்றிக் கலந்து வைக்கவும். ஊறிய பின் வெங்காயம், பச்சைமிளகாய் தாளித்து, அவலை கொட்டிக் கிளறினால் பிஸிபேலா மாதிரி சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.

தொகுப்பு: அபர்ணா சுப்ரமணியம், சென்னை.

 

The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.

Tags : Kumkumam Dozhi ,Dinakaran ,
× RELATED கிறிஸ்துமஸ் துளிகள்