×

உலகின் முதல் கார்பன் நியூட்ரல் பேபி!

நன்றி குங்குமம் தோழி

தமிழ்நாட்டை சேர்ந்த ஒன்றரை வயதாகும் ஆதவி என்கிற குழந்தைதான் ‘உலகின் முதல் கார்பன் நியூட்ரல் குழந்தை.’ இந்தாண்டு கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு வனத்துறை குழந்தை ஆதவியை, ‘தமிழ்நாடு பசுமை திட்டத்தின் தூதர்’ என்று அறிவித்திருந்தது. உலகின் முதல் கார்பன் நியூட்ரல் குழந்தை என்ற பெருமையுடன் குழந்தை ஆதவி ‘ஆசிய சாதனைகள் புத்தகத்தில்’ (Asia Book of Records) இடம் பெற்றிருக்கிறார். அவரது தந்தை தினேஷ் இதுகுறித்து நம்மிடம் விளக்குகிறார்.

“ஆதவியை கார்பன் நியூட்ரல் குழந்தையாக வளர்ப்பதில் எங்களுக்கு மிகுந்த சந்தோஷம். அவளின் வாழ்நாளில் வெளியிடும் கார்பனின் அளவை ஈடுகட்டும் விதமாக நாங்கள் மரங்களை நட்டு வைத்திருக்கிறோம். இதனை விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் சராசரியாக ஒரு மனிதன் வெளியிடும் கார்பனின் அளவு 2 முதல் 3 டன் என்று கணக்கிடப்படுகிறது. கார்பன் டை ஆக்ஸைடு ஒரு முக்கியமான வாயுவாக இருந்தாலும், அளவுக்கு அதிக வெளியேற்றம் உலக வெப்பமயமாதல் பிரச்னைக்கு வழிவகுக்கும்.

நாம் வெளியேற்றும் கார்பனை மரங்கள் உள்வாங்கிக்கொள்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் வெளியேற்றப்படும் கார்பனை உள்வாங்கிக்கொள்ள போதுமான அளவு மரங்கள் இருந்தால்தான் நம்மால் வெளியிடப்படும் கார்பனின் அளவை ஈடுகட்ட முடியும். இதனை கருத்தில் கொண்டு என் குழந்தை கருவில் இருக்கும் போதே கார்பன் அளவினை சமன் செய்ய நினைத்தேன். என் மனைவி கருத்தரித்தவுடன் நாங்க வசிக்கும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மரங்களை நட ஆரம்பித்தேன். என் மகள் பிறக்கும் முன்பே 6,000 மரங்களை நடவு செய்திருந்தேன். அதன் மூலம் அவள் வாழ்நாளில் வெளியிடும் கார்பனின் அளவு ஈடு செய்யப்படும். இதனால்தான் எங்க குழந்தை ஆதவி ‘கார்பன் நியூட்ரல் குழந்தை’ என அழைக்கப்படுகிறாள்.

உலகளவில் ஒரு குழந்தை பிறக்கும் போதே கார்பன் நியூட்ரல் குழந்தையாக இருப்பது இதுவே முதல் முறை என்பதால் ‘ஆசிய சாதனைகள் புத்தகத்திலும்’ இந்த சாதனை பதிவாகியுள்ளது. அமெரிக்காவிலும் ஒரு அமைப்பின் மூலம் இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு வனத்துறை ஆதவியை ‘தமிழ்நாடு பசுமைத் திட்டத்தின் தூதராக’ அறிவித்து சிறப்பித்தது. ஒவ்வொரு பெற்றோரும் கார்பன் நியூட்ரலை கருத்தில் கொண்டு மரங்களை நடுவதில் ஆர்வம் காட்ட வேண்டும். இதற்காக ‘நோவா’ திட்டம் அமைத்து அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். தற்போது 25 பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக மரங்களை நடுகின்ற செயலில் உள்ளனர். மருத்துவமனைகளுக்கு சென்று பிறக்கும் குழந்தைக்காக மரக்கன்றினை நட பெற்றோரிடம் வலியுறுத்தி வருகிறோம்” என்றவர் கார்பன் நியூட்ரல் குறித்து மேலும் விவரிக்கிறார்.

“கார்பன் மற்ற வாயுடன் இணைந்து ஓஸோனில் பூமியின் வெப்பத்தை சமநிலையில் வைக்க உதவுகிறது. கார்பன் இல்லை என்றால் பூமியின் வெப்ப சமநிலை பாதிக்கப்பட்டு, அதிகப்படியான குளிர்ச்சி நிலவும். கார்பன் வெளியீடு அளவாக இருந்தால் எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் அதிகப்படியான கார்பன் வெளியேற்றம் வளிமண்டலத்தில் சேரும் போது புவி அதிகமாக வெப்பமடையும்.கடந்த 20 ஆண்டுகளில் பிளாஸ்டிக், செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள், மின்சாரம், வாகனங்கள் மூலம் கார்பன் வெளிப்பாடு அதிகரித்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு ஒரே தீர்வு மரம் நடுவது. அவை கார்பனை உள்வாங்கி வளிமண்டலத்தில் கார்பன் சேராமல் பாதுகாக்கிறது.

அடுத்தபடியாக பொருட்களின் பயன்பாட்டை குறைப்பது. இதற்காக ‘நிலைத்தன்மை’ (sustainability) என்கிற கருத்தினை நானும் என் குடும்பத்தினரும் பின்பற்றுகிறோம். அநாவசியமாக கார், மோட்டார் வாகன பயணங்களை எங்களால் முடிந்த வரை தவிர்க்கிறோம். இது போன்று ஒவ்வொருவரும் இதனை செய்ய முன்வரவேண்டும். சில தொழிற்சாலை நிறுவனங்களும் கார்பனின் அளவை ஈடு செய்ய ஒரு ஏக்கர் அல்லது அதற்கு மேலான நிலப்பரப்புகளில் மரங்களை காடுகளாக வளர்க்கிறார்கள். உலகின் எந்த மூலையிலும் இதனை செய்யலாம்” என்கிறார். கார்பன் நியூட்ரல் விழிப்புணர்வை பரவலாக்க எண்ணி ‘சீராக்கு’ என்ற அமைப்பின் மூலம் பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறார் தினேஷ்.

“எனது மகள் ‘முதல் கார்பன் நியூட்ரல் குழந்தை’ ஆனதால் ‘சீராக்கு’ என்கிற அமைப்பினை உருவாக்கி அதன் மூலம் மரங்களை நடும் பணிகளை செய்து வருகிறேன். தன்னார்வலர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், விவசாயிகளுடன் இணைந்தும் மரங்களை நடும் செயல்களில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த இரண்டு வருடங்களில் நான்கு லட்சம் மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம். அதில் 3 லட்சம் மரங்களை விவசாய நிலங்களில் நடவு செய்துள்ளோம்.

சென்னையில் ஒரு லட்சம் மரங்களை ‘மியாவாக்கி’ முறையில் நடவு செய்திருக்கிறோம். குறுகிய இடத்தில் அடர் வனத்தை உருவாக்குவதுதான் மியாவாக்கி. குறுங்காடுகளை உருவாக்குவதன் மூலம் மரங்களின் நன்மைகள் வெகு விரைவாக கிடைக்கும். இங்கு ஒரே வகையான மரங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தாவரங்கள், பூச்செடிகள், பயிர்களுடன் சேர்த்து சிறிய இடத்தில் நெருக்கமாக வளர்க்கும்போது அவற்றின் வளர்ச்சிவிகிதம் வழக்கத்தை விட 10 மடங்கு அதிகரிக்கும். இந்த முறையில் மரங்களை வளர்க்கும் முயற்சிகளை பல்வேறு இடங்களில் மேற்கொண்டு வருகிறோம்.

சென்னையில் ஒரு அரசுப் பள்ளியின் வளாகத்தில் ‘நேச்சர் லேர்னிங் சென்டர்’ என்கிற பெயரில் இது போன்ற ஒரு அடர்வனத்தை உருவாக்கியுள்ளோம். இந்த அடர் வனத்தில் பறவைகள், நத்தைகள், பட்டாம்பூச்சிகள், மண்புழுக்கள் போன்ற பல்வேறு உயிரினங்களும் வாழ்கின்றன. செண்பக மரம், நித்திய கல்யாணி, பாரிஜாதம், பவளமல்லி, கருமருது போன்ற தமிழ்நாட்டை பாரம்பரியமாக கொண்ட 68 வகையான மரங்கள் இதில் அடங்கியுள்ளன.

‘பிரிங் பேக் பீஸ்’ என்கிற அமைப்பு மூலம் தேனீ வளர்ப்பினை பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தேனீக்கள் விவசாயத்திற்கும் முக்கியமானவை. இவற்றால் தாவரங்களிலும், பயிர்களிலும் மகசூல் அதிகரிக்கும். விதைகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்தி சென்று விதைகளை விருத்தி செய்வதில் தேனீக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தேனீ வளர்ப்பினை அதிகரிக்க விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சிகள், தேனீ வளர்ப்புக்கு தேவையான உபகரணங்களையும் கொடுத்து, விவசாய நிலங்களில் தேனீ வளர்ப்பினை தொடங்கி வைத்தோம்.

தற்போது 3000 விவசாயிகள் தேனீ வளர்ப்பினை பராமரித்து வருகின்றனர். மேலும் இதனை பல்வேறு இடங்களிலும் செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறோம். மரங்களை வளர்ப்பதுமின்றி அவற்றிற்கு தேவையான நீரின் தேவையும் அதிகமானதாக இருக்கிறது. ‘நீரின்றி அமையாது உலகு’ என்கிற வள்ளுவரின் வார்த்தைகளுக்கு ஏற்ப நீர் நிலைகளை மீட்டெடுத்து அவற்றை பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

இது போன்று பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். மைக்ரோ பிளாஸ்டிக்கின் பயன்பாடுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. நாம் உட்கொள்ளும் உணவுப்பொருட்கள் மூலமாகவே ஒரு சிறிய அட்டை அளவிலான மைக்ரோ பிளாஸ்டிக்குகள் நம் உடலுக்குள் செல்கின்றன. பிளாஸ்டிக் பயன்பாட்டினை குறைத்துக் கொள்ளவும், சோலார் எனர்ஜி மூலம் மின்சாரத்தை பயன்படுத்தவும் வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள்.

கார்பன் நியூட்ரல் தொடர்பான முன்னெடுப்புகளை நான் மட்டும் எடுத்தால் போதாது… ஒவ்வொரு தனிநபரும் இதனை செயல்படுத்த வேண்டும். மரங்களை நடுவதோடு மட்டுமில்லாமல் அவற்றினை பராமரித்து வளர்க்கவும் வேண்டும்.மரங்கள் வளர்ப்பதற்கு இடமில்லை என்கிற காரணங்களை சொல்லாமல், அனைவரும் வீடுகளில் ஒரு சிறு தொட்டியில் பூச்செடிகளையாவது வளர்க்க வேண்டும். நம் குழந்தைகள் நம்மை பார்த்துதான் வளர்கிறார்கள். அவர்களுக்கும் சிறு வயதிலேயே இயற்கை மீதான ஆர்வத்தை தூண்ட வேண்டும்” என சமூக அக்கறையுடன் மக்களுக்கு கோரிக்கை விடுத்த தினேஷ், கடந்த 2021ம் ஆண்டு புதுவிதமாக மெட்டாவெர்ஸ் முறையில் திருமணம் செய்துள்ளார்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

The post உலகின் முதல் கார்பன் நியூட்ரல் பேபி! appeared first on Dinakaran.

Tags : Kungumam Dozhi ,Aadavi ,Tamil Nadu ,Tamil Nadu Forest Department ,Tamil Nadu Green Project ,
× RELATED குழந்தைக்காக ஆரம்பித்தது… முழு நேர தொழிலாகவே மாறியது!