×

குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!

நன்றி குங்குமம் தோழி

உணவே மருந்துதான் நம்முடைய தாரக மந்திரம். அந்த மந்திரத்தை அழகா புரிந்து கொண்டுள்ளார் ஈரோட்டைச் சேர்ந்த பிரேமா. ஆசிரியராக பணிபுரிந்து வந்த பிரேமா குடும்பச் சூழல் காரணமாக வேலையினை தொடர முடியாமல் போனது. ஆனால் மனம் தளராமல் வீட்டில் இருந்தபடியே சிறிய அளவில் தொக்கு வகைகளை தயாரித்து அதனை பிசினஸாக மாற்றி ‘யாத்ரா டிரேடர்ஸ்’ என்ற பெயரில் மிகவும் சக்சஸ்ஃபுல்லாக நடத்தி வருகிறார்.

‘‘நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் கீரைகளில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அதனை நாம் சமைத்து சாப்பிட்டாலே பல நோய்க்கு மருந்தாக அமையும். இது பலருக்கு தெரிவதில்லை என்பதைக் காட்டிலும் அதனை முறையாக சமைத்து சாப்பிட நேரமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எங்க வீட்டில் தினமும் ஒரு கீரை என்பது உணவில் கட்டாயம் இருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் மூலிகை வகை கீரைகளையும் உணவில் சேர்ப்பது வழக்கம். இவற்ைற முறையாக செய்து சாப்பிட பலருக்கு நேரமிருப்பதில்லை. ஆனால் அதையே ெதாக்கு வடிவத்தில் கொடுத்தால், அதனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள முடியும். ஆரோக்கியமும் கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் நான் இந்த பிசினசையே ஆரம்பிச்சேன்.

என் ெசாந்த ஊர் ஈரோடு. எனக்கு சின்ன வயசில் இருந்தே ஆசிரியராக வேண்டும் என்பதுதான் ஆசை. முதுகலை பட்டப் படிப்பு முடித்து ஒரு வருடம் ஆசிரியர் வேலை பார்த்து வந்தேன். அதன் பிறகு பி.எட் படித்தால்தான் அந்த வேலையில் தொடர்ந்து இருக்க முடியும் என்ற சூழ்நிலை வந்தது. அதனால் பி.எட்டும் படித்து முடித்து, ஆசிரியர் பணியில் ஈடு பட்டு வந்தேன். இதற்கிடையில் எனக்கு திருமணமானது. அந்த நேரத்தில் என் அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அவரை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் நான் பார்த்து வந்த ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்தேன்.

வீட்டில் அப்பாவிற்கு அனைத்தும் நான்தான் பார்த்து பார்த்து செய்து வந்தேன். அப்போது அவரின் உடல் நிலை சரியாக மருந்துகள் சாப்பிட்டாலும், நாம் சாப்பிடும் உணவு மூலமாகவும் அவரின் உடல் ஆரோக்கியத்தை கவனிப்பது அவசியம் என்று நினைத்தேன். அதனால் மூலிகை தலைகள் மற்றும் இலைகள் குறித்து படித்து தெரிந்து கொண்டேன். எந்த மூலிகை என்ன வேலை செய்யும் என்பதையும் புரிந்து கொண்டேன்.

அப்பாவிற்கு அந்தந்த மூலிகைகளை கொண்டு ரசம் அல்லது சூப் வடிவில் கொடுத்தேன். அவரின் உடல்நிலையில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்தது. நான் மூலிகைகள் குறித்து தெரிந்து வைத்திருந்ததால், என் பக்கத்து வீட்டில் உள்ளவர்களும் என்னிடம் அவர்களின் சின்னச் சின்ன உடல் உபாதைகளுக்கு என்ன மூலிகை எப்படி சாப்பிடலாம்னு ஆலோசனை கேட்க ஆரம்பித்தார்கள். நானும் சொல்லிக் கொடுப்பேன். அதன் பிறகு அந்த மூலிகைகளை தொக்காக செய்து கொடுக்க ஆரம்பித்தேன். அது பலருக்கு பிடித்திருந்தது. அதனால் அவர்கள் என்னிடம் செய்ய சொல்லி வாங்க ஆரம்பித்தார்கள். அப்போதுதான் இதையே ஏன் ஒரு தொழிலாக நீ மாற்றக்கூடாதுன்னு அவர்கள்தான் ஆலோசனையே சொன்னார்கள்.

எனக்கும் அந்த ஐடியா சக்சஸாகும்னு தோன்றியது. மேலும் என் கணவரும் சொந்தமாக தொழில் செய்வதால், அவரும் எனக்கு உதவுவதாக கூறினார். அப்படித்தான் இந்த பிசினஸை ஆரம்பித்தேன்’’ என்றவர், மூலிகைகள் மேல் ஏற்பட்ட ஆர்வம் குறித்து விவரித்தார். ‘‘நான் 8ம் வகுப்பு படித்துக் ெகாண்டிருந்த சமயம். ஒரு முறை கோபிச்செட்டிப்பாளையம் பஸ் நிலையத்தில் ஒரு குழந்தை புத்தகங்களை விற்றுக் கொண்டிருந்தாள். அவள் என்னிடம் ஒரு புத்தகமாவது வாங்கிக் கொள்ளுங்கன்னு கேட்டாள். எனக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. அதனால் அவளிடம் ரூ.10 கொடுத்து ‘மூலிகைகள் பற்றி சித்தர் குறிப்புகள்’ என்ற புத்தகத்தை வாங்கினேன். அதில் பல மூலிகைகள் குறித்து குறிப்பு இருந்தது.

மேலும் அந்த மூலிகைகளை எவ்வாறு சமைக்க வேண்டும் என்றும் அதற்கான செய்முறை குறித்தும் குறிப்பிட்டு இருந்தது. அதை நான் வீட்டில் செய்து பார்த்தேன். அப்படித்தான் எனக்கு மூலிகை இலை, தழைகள் குறித்து தெரிந்தது. அதன் பிறகு நான் வீட்டில் பிரண்டை தொக்கு, முடக்கத்தான் கீரை தொக்கு, வெங்காய தொக்கு, தக்காளி தொக்கு என பல வகையான தொக்கு வகைகளை செய்வேன். முதலில் என் வீட்டின் பயன்பாட்டிற்காகத் தான் பயன்படுத்தி வந்தேன். அதன் பிறகு தான் தொழிலாக செய்யும் போது மேலும் பல வகையான தொக்கு மற்றும் கஞ்சி வகைகளை சேர்த்தேன்.

தொக்கு என்றால் ஒரே சுவையாக தானே இருக்கும் என்று நினைக்கிறார்கள். அப்படி இல்லை. ஒவ்வொரு வகை தொக்கும் தனிப்பட்ட சுவையில் இருக்கும். மேலும் ஒவ்வொரு வகைக்கும் சரியான விகிதத்தில் அதற்கான பொருட்களை சேர்க்க வேண்டும். அப்போதுதான் உண்மையான சுவையினை உணர முடியும். கறிவேப்பிலையில் ஒரு வித கசப்பு தன்மை இருக்கும். அதனுடன் கோவைக்காயின் இலை சேர்க்கும் போது அந்த கசப்பு தன்மை தெரியாது. முடக்கத்தான் கீரையும் கசப்பு சுவை கொண்டதுதான் என்றாலும், அந்தக் கீரையின் அளவினை சரியான விகிதத்தில் சேர்க்க வேண்டும். இவை எல்லாம் நான் ஒவ்வொரு தொக்குகளை தயாரித்து சுவைத்து அதன் பிறகு அதற்கான சரியான அளவினை கண்டறிந்த பிறகுதான் விற்பனைக்கே கொண்டு வந்தேன்.

தற்போது கருணைக் கிழங்கு தொக்கு, பிரண்டை தொக்கு, கோவை இலை, கறிவேப்பிலை தொக்கு, வல்லாரை தொக்கு, பாகற்காய் தொக்கு, புளிச்ச கீரை தொக்கு, ஃப்ரூட் மால்ட், கேரட் மால்ட், உளுந்தகஞ்சி மிக்ஸ், ஊறுகாய் வகைகளும் விற்பனை செய்கிறேன். இந்தக் கீரை வகைகள் பல வகையான நோய்களை குணப்படுத்தக்கூடியது. முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு சிறந்தது. பிரண்டை எலும்புகளுக்கு நல்ல பலத்தை தரும். வல்லாரை, மூளை நரம்புகளை தூண்டி விட்டு சுறுசுறுப்பாகவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும் உதவும்.

கறிவேப்பிலை முடி வளர்ச்சிக்கு நல்லது. கோவை இலை வாயு பிரச்னையை சரி செய்யும், ரத்த அழுத்தத்தை சீராக்கும். புளிச்ச கீரை, கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கருணைக் கிழங்கு நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு உகந்தது, குடல் பகுதியை சுத்தமாக வைத்திருக்கும். மூக்கிரட்டை கீரை அல்லது அதனுடைய வேரை கசாயம் வைத்து குடிக்கலாம். சிறுநீரகம் சம்பந்தமான பிரச்னைகள் குணமாகும். இந்தப் பலன்கள் பலருக்கு தெரியாது. நம் உணவில் உள்ள மருத்துவ குணங்களை நாம் தெரிந்து கொண்டு ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என்பதற்காகவே இந்தத் தொழிலை தொடங்கினேன்.

தொக்கு தயாரித்தோம், விற்பனை செய்தோம், லாபம் பார்த்தோம் என்று இருந்திட முடியாது. சிறு தொழிலாக இருந்தாலும் பல சவால்கள் நிறைந்திருக்கும். பாட்டில்களில் மட்டுமில்லாமல் பாக்கெட் வடிவத்திலும் விற்பனை செய்கிறேன். மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள், அதிகமாக பொருட்கள் வாங்கும் இடங்களுக்கு சென்று அவர்களுக்கு இந்த தொக்குகளின் நன்மைகளைச் சொல்வேன். மேலும் கடை உரிமையாளர்களிடமும் நேரடியாக விற்பனை செய்தேன். ஆரம்பத்தில் யாரும் வாங்கவில்லை. ஆனால் ஒரு தடவை என்னிடம் பொருட்கள் வாங்கியவர்கள் அதன் பிறகு தொடர்ந்து வாங்க ஆரம்பித்தார்கள்.

பொதுவாக இயற்கை முறையிலான பொருட்களின் விலை அதிகம் என்பதால், ஓரளவுக்கு வசதி படைத்தவர்கள்தான் வாங்குகிறார்கள். ஆனால் என் பொருள் அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும்னு நினைச்சேன். அதனால் எல்லோரும் வாங்கக்கூடிய விலையில் விற்பனை செய்கிறேன்.வீட்டில் விறகு அடுப்பில்தான் சிறிய அளவில் செய்தேன். ஆர்டர் அதிகரிக்க கேஸ் அடுப்பிற்கு மாறிடலாம்னு ஆலோசனை சொன்னார்கள்.

ஆனால் அதற்கான செலவினை நான் தொக்கு விலைகளில் அதிகப்படுத்த வேண்டும் என்பதால், இன்று வரை விறகடுப்பில்தான் தயாரிக்கிறேன். இதற்காக பெரிய அளவில் இயந்திரம் ஒன்றை வடிவமைத்திருக்கிறோம். விறகுகளை கூட மரங்களை அறுக்கும் நிறுவனத்தில் இருந்து அங்குள்ள மரத்துகள்களை வாங்கிதான் பயன்படுத்துகிறேன். விறகடுப்பில் செய்யும் போது எங்களுக்கு இன்னொரு நன்மையும் கிடைக்கிறது.

அடுப்பை அணைத்த பிறகும் அதில் தணல் சில மணி நேரங்களுக்கு இருக்கும். அது என் தொக்கினை நன்கு சுண்ட செய்யவும், சீக்கிரம் கெட்டுப் போகாமலும் பாதுகாக்கிறது. தொக்கினை நன்கு ஆற வைத்து காற்றுப்புகாத பாட்டில்களில் அடைத்து விட்டால் நான்கு மாத காலம் வரை கெடாமல் இருக்கும். மூலிகைகளைப் பொறுத்தவரை எங்களின் தோட்டத்திலேயே விளைவிக்கிறோம். அதிகமாக தேவைக்கு பக்கத்தில் உள்ள தோட்டங்களில் இருந்து வாங்கிக் கொள்கிறோம்.

உணவுப் பொருள் பொறுத்தவரை அதில் நிறை குறைகள் இருக்கும். வாடிக்கையாளர்கள் சொல்லும் குறைகளை நிவர்த்தி செய்ததால்தான் என்னால் இவ்வளவு தூரம் வளர்ச்சியடைய முடிந்திருக்கிறது. தற்போது ஈரோடு சுற்றுவட்டாரம் மட்டுமில்லாமல், சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிநாட்டிற்கும் விற்பனை செய்து வருகிறேன். பலரும் என் உணவு வகைகளை சாப்பிட்டு நலமாக இருக்கிறோம் என சொல்லும் போது ஆசிரியர் பணியில் இருந்த போது கூட கிடைக்காத மனநிறைவு எனக்கு இந்தத் தொழிலில் கிடைத்துள்ளது. பெண்கள் தங்களுடைய திறமைகளை முன்னிருத்தி மேம்படுத்தினால் கண்டிப்பாக வெற்றி பெறலாம்’’ என்றார் பிரேமா.

தொகுப்பு: மா.வினோத்குமார்

படங்கள்: ஜோசப் ஆரோக்கிய இன்பராஜா

The post குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்! appeared first on Dinakaran.

Tags : Prema ,Erode ,
× RELATED போதைப்பொருள் அனுப்பப்பட்டுள்ளது என...