சென்னை: கலைஞரை போலவே ஸ்டாலின் தலைமையில் 40-க்கு 40 வெற்றி பெற்றுள்ளோம். வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எனது நன்றி தெரிவித்து கொள்கிறேன். திமுகவின் தேர்தல் வெற்றி கலைஞருக்கு காணிக்கையாக்குகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் முதல்வர் தெரிவித்துள்ளதாவது; “திமுக கூட்டணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி கிடைத்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த தேர்தலில் மீதமிருந்த 1 தொகுதியையும் சேர்த்து 40க்கு 40 வெற்றி பெற வைத்திருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள். கலைஞரை போலவே ஸ்டாலின் தலைமையில் 40-க்கு 40 வெற்றி.
அனைவருக்கும் நன்றி. அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகத்தை காப்பதற்கான நடவடிக்கைகளை திமுக தொடர்ந்து முன்னெடுக்கும். திமுகவின் தேர்தல் வெற்றி கலைஞருக்கு காணிக்கையாக்குகிறேன். 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என கூறிய பாஜகவால் பெரும்பான்மை இடங்களைக்கூட பெற முடியவில்லை.
கருத்துக்கணிப்பு என்ற பெயரில் உளவியல் ரீதியான தாக்குதலை பாஜக கொடுத்தது. பாஜகவின் கனவு தமிழ்நாட்டில் பலிக்கவில்லை. மோடியின் எதிர்ப்பலை நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நிலவுகிறது. டெல்லியில் நாளை நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறேன்” என கூறினார்.
தலைவரான பின்னர் சந்தித்த முதல் தேர்தலிலேயே தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் 39 இடங்களில் திமுக கூட்டணிக்கு அவர் வெற்றியை தேடி தந்தார். அவரின் சூறாவளி பிரசாரம் அந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்தது. திமுக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அனைத்து தேர்தலிலும் வெற்றியை மட்டுமே ருசித்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
The post வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றி; திமுகவின் தேர்தல் வெற்றி கலைஞருக்கு காணிக்கையாக்குகிறேன்: முதல்வர் appeared first on Dinakaran.