×

சேலம்-திருச்சி நெடுஞ்சாலையில் மாய மானை ராமர் தேடிய பொய்மான்கரடு

*கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்

மல்லூர் : சேலம்-திருச்சி நெடுஞ்சாலையில், மாய மானை ராமர் தேடிய பொய்மான்கரடு குறித்தும், அதை காண்பதற்கும் சுற்றுலா பயணிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து
வருகிறது. சேலத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில், திருச்சி மெயின்ரோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சி. இங்குள்ள மலை குன்றின் மேல் அமைந்துள்ளது பொய்மான் கரடு. இந்த பொய்மான்கரடு சமீபகாலமாக சுற்றுலா பயணிகள் அதிகம் தேடும் இடமாக மாறியுள்ளது.

இங்குள்ள பாறைக்குன்று ஒன்று, இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. இதற்கு மத்தியிலுள்ள இடத்தில் மலையின் இடது பகுதியில் பார்த்தால், மான் ஒன்று எட்டிப் பார்ப்பது போன்ற தோற்றம் தெரியும். ஆனால் அருகில் போய் பார்த்தால் உள்ளே எதுவும் இல்லை. அதாவது பொய் தோற்றம்தான் என்பது புரியும். இதனால் இந்த குன்றானது பொய்மான்கரடு என்று அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த பொய்மானை ராமாயணத்துடன் தொடர்பு படுத்தி, சமயஆர்வலர்கள் பேசி வருகின்றனர். இதன் காரணமாகவே, பொய்மான்கரட்டை தேடி வருவோரின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ராமனை சீதையிடம் இருந்து பிரிக்க ராவணனால் அனுப்பப்பட்ட மாரீசன், மாய மான் உருவத்தில் வந்தான். அப்போது, சீதை அந்த மானை பிடித்துக் கொடுக்கும்படி ராமனிடம் கேட்டார்.

மானை ராமர் துரத்தி கொண்டு செல்லும்போது, மாரீசன் பொய்மான் கரட்டின் மேல் உள்ள பாறையை பிளந்து கொண்டு உள்ளே சென்று மறைந்து கொண்டார்.

அதன் காரணமாகவே, இந்த பாறைக் குன்றை பொய்மான்கரடு என்று பல நூற்றாண்டுகளாக அழைத்து வருகின்றனர் என்பது அவர்கள் கூறும் தகவல். இது ஒருபுறமிருக்க, ‘‘பொய்மான் உருவம் வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. பிளந்து நிற்கும் இரண்டு பாறைகளுக்கு நடுவில், சூரிய வெளிச்சம் விழுவதால் இத்தகைய உருவம் தென்படுகிறது,’’ என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இன்னும் சிலர், ‘‘இந்தப் பாறை இடுக்கின் கீழ் வற்றாத சுனை ஒன்று உள்ளது. அதில் இருக்கும் தண்ணீரில் படும் சூரிய ஒளியின் பிரதிபலிப்பே, மான் உருவமாக தென்படுகிறது,’’ என்கின்றனர். எது எப்படி இருந்தாலும் சேலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் இடமாக திகழ்கிறது பொய்மான் கரடு என்கின்றனர் வரலாற்று ஆர்வலர்கள். இது குறித்து வரலாற்று ஆர்வலர்கள் கூறியதாவது:

1800ம் ஆண்டு வாக்கில் நாயக்கர்களின் ஆட்சி இங்ேக நடந்துள்ளது. அப்போது பொய்மான் கரட்டில் பெருமாள் கோயில் ஒன்றை உருவாக்கி, அவர்கள் குலதெய்வமாக வழிபட்டுள்ளனர். அந்த கோயில் பின்னாட்களில் சிதிலமடைந்து சிதைந்துள்ளது. இதற்கு சான்றாக இன்றும் திருக்கோடி ஏற்றும் கம்பம் ஒன்று அங்குள்ளது. 1920ம் ஆண்டில் காசியாத்திரை சென்ற சிவானந்தம் என்னும் சன்னியாசி, பல்வேறு இறை தலங்களுக்கு சுற்றி விட்டு, நிறைவாக பொய்மான் கரட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார். பாறைக்கு அருகில் ஒரு குடிசை போட்டு தங்கிய அவர், இங்கு ராமருக்கு ேகாயில் கட்டுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். போதுமான நிதி கிடைக்காததால், கோயிலை முழுமையாக கட்டுவது சாத்தியமில்லாமல் போனது.

ஆனாலும் சிவானந்தர் பொய்மான் கரடு, கோதண்டராமர் ஆலயம் ஸ்தல புராணத்தை 1925ம் ஆண்டு எழுதியுள்ளார். இதை கெஜ்ஜல்நாயக்கன்பட்டி மக்கள் விழா நடத்தி வெளியிட்டு இருக்கிறார்கள். பொய்மான் கரட்டில் தற்போது சிற்பக்கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து, பழங்கால முறைப்படி கோயில் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்தக் கோயிலின் அமைப்பை, ஆசியாவின் மிகச் சிறந்த சிற்பியான கணபதி ஸ்தபதி வடிவமைத்து கொடுத்துள்ளார். துரிதமாக பணிகளை முடித்தால், இதுவொரு சிறந்த சுற்றுலா தலமாக உருவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு வரலாற்று ஆர்வலர்கள் கூறினர்.

3 முதல்வர்கள் பார்த்த இடம்

பொய்மான் கரடு பகுதியில் வசிக்கும் கிருஷ்ணசாமி (76) கூறுகையில், ‘‘இந்த பொய்மான் கரட்டை முன்னாள் முதல்வர்களான காமராஜர், எம்ஜிஆர், கருணாநிதி போன்றோர் நேரில் வந்து பார்வையிட்டுள்ளனர். 1958ம் ஆண்டு, சென்னை மகானா ஆளுநராக இருந்த விஷ்ணுராம் மேதி, பொய்மான் கரட்டை பார்வையிட்டு, இதனை சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால், பல்வேறு ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்த நிலையில், 64 வருடங்களாக இப்பகுதியில் எந்த வசதியும் செய்யப்படவில்லை. இப்பகுதியில் பொய்மான் கரடு பெயர் பலகையும் சுமைதாங்கி கல்லும் இருந்தது. அதுவும் இப்போது தென்படவில்லை,’’ என்றார்.

ராமாயண சுவடுகள் இங்கே அதிகமுள்ளது

கெஜ்ஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்த நாட்டாண்மை செந்தமிழ் செல்வன் கூறுகையில், ‘சாலையின் வலது புறம் கரட்டின் பிளவு பகுதியில், குன்றின் நடுவில் இரு மான்கள் வெள்ளை நிறத்தில் இருப்பது போல் தோற்றம் அளிப்பது அதிசயமாக உள்ளது. சாலையின் இடது புறத்திலிருந்து பார்த்தால், மான்கள் இருப்பது போல் தோற்றம் அளிக்கும். அருகில் சென்று பார்த்தால், மான்கள் இருப்பதில்லை. அதனால் ராமரை துரத்த வைத்த மாரீசன் என்னும் மாயமானாக இது இருக்கலாம் என்ற பேச்சு பல்லாண்டுகளாக உள்ளது. சேலத்தில் அயோத்தியாப்பட்டணம் ராமர்கோயில், வனவாசி, ஜலகண்டாபுரம் என்று ராமாயண சுவடுகள் நிறைந்த இடங்கள் அதிகம். அதனால் மாயமான் தோற்றமும் பரபரப்பாக பேசப்படுகிறது,’ என்றார்.

The post சேலம்-திருச்சி நெடுஞ்சாலையில் மாய மானை ராமர் தேடிய பொய்மான்கரடு appeared first on Dinakaran.

Tags : Salem-Trichy highway ,Mallur ,Ramar ,Salem ,Trichy Mainroad ,Dinakaran ,
× RELATED பலாப்பழ சீசன் துவங்கியதால்...