×

புதிய யானைகள் வழித்தட பிரச்னை செல்போன் டவரில் ஏறி விவசாயி போராட்டம்

*கூடலூரில் பரபரப்பு

கூடலூர் : புதிய யானைகள் வழித்தட அறிக்கை எதிரொலியாக கூடலூரில் விவசாயி ஒருவர் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட அரசின் வனத்துறை கடந்த மாதம் வெளியிட்ட புதிய யானை வழித்தட அறிக்கை காரணமாக கூடலூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் வாழும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். புதிய வழித்தட அறிக்கையை ரத்து செய்யக்கோரி கடந்த 13ம் தேதி முதல் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்து அரசியல், பொதுநல, வணிக மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் போராட்டங்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் கூடலூர்-ஊட்டி சாலையில் எம்எல்ஏ அலுவலகத்திற்கு எதிரே உள்ள பிஎஸ்என்எல் செல்போன் டவரில் ஏறிய ஓவேலி பேரூராட்சி செல்வபுரம் பகுதியை சேர்ந்த தாயகம் திரும்பிய தமிழரும், விவசாயியும், அதிமுக வர்த்தக அணியின் மாவட்ட பொருளாளருமான மணிவர்மா (40) திடீர் போராட்டம் நடத்தினார். அவர் தனது கைகளில் புதிய யானை வழித்தட திட்டத்தின் மூலம் கூடலூரில் வசிக்கும் தாயகம் திரும்பிய தமிழர்களை வெளியேற்ற சதி நடப்பதாக எழுதிய பதாகையை பிடித்திருந்தார்.

சுமார் 100 மீட்டர் உயர செல்போனில் 30 மீட்டர் உயரம் வரை ஏறிய அவர் அங்கிருந்தபடி தனது கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடலூர் டிஎஸ்பி வசந்தகுமார், எஸ்ஐ கபில்தேவ், கூடலூர் வனச்சரகர் ராதாகிருஷ்ணன், ஓவேலி வனச்சரகர் சுரேஷ், தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவரை கீழே இறங்கி வருமாறு கூறி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது மணிவர்மா செல்போன் டவரில் நின்றபடி பேசுகையில், ‘‘வனத்துறையினரின் நடவடிக்கைகள், அறிவிப்புகள் இப்பகுதி மக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. இப்பகுதிகளில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானவர்கள் வேறு போக்கிடம் இல்லாத நிலையில் உள்ளனர். மூன்று தலைமுறைக்கும் மேலாக வாழ்ந்து வரும் இவர்களுக்கு அரசின் அனைத்து அங்கீகாரங்களும் முழுமையாக கிடைத்துள்ள நிலையில், நிலத்திற்கான உரிமை கிடைக்காத நிலையில் உள்ளனர்.

தற்போது வனத்துறையின் அறிக்கையால் மக்களின் அச்சம் மேலும் அதிகரித்து வருகிறது. எனவே இப்பகுதி மக்களின் பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவே இந்த போராட்டத்தை நடத்துகிறேன். இதற்கு உறுதியான உத்தரவாதம் கிடைக்க வேண்டும்’’ என்றார்.

அப்பகுதிக்கு வந்த அதிமுக ஒன்றிய செயலாளர் பத்மநாதன், ஓவேலி பேரூர் செயலாளர் கண்மணி, பொதுக்குழு உறுப்பினர் ராஜா தங்கவேல் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் கூடலூர் எம்எல்ஏ பொன் ஜெயசீலன் போராட்டம் நடத்திய மணிவர்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ‘‘புதிய யானை வழித்தட வரைவு திட்டத்தால் மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

நீங்கள் எடுத்த போராட்டமும் தற்போது அரசின் கவனத்திற்கு சென்றுள்ளது. எனவே நீங்கள் தனியாகப் போராடுவதை கைவிட்டு கீழே இறங்கி வந்து எங்களுடன் இணைந்து போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார். இதையடுத்து சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பின் மணிவர்மா கீழே இறங்கி வந்தார். பின்னர் போலீசார் அவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

 

The post புதிய யானைகள் வழித்தட பிரச்னை செல்போன் டவரில் ஏறி விவசாயி போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kudalur Kudalur ,Kudalur ,Tamil Nadu government ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...