×

புதிய ஒப்பந்ததாரரை நியமிக்கும் வரை மெரினா பார்க்கிங் பகுதியில் கட்டணம் வசூலிக்க தடை: மாநகராட்சி உத்தரவு


சென்னை: மெரினா கடற்கரையில் பார்க்கிங் கட்டண ஒப்பந்தம் முடிந்துள்ள நிலையில், புதிய ஒப்பந்ததாரரை நியமிக்கும் வரை பார்க்கிங் பகுதியில் கட்டணம் வசூலிக்க கூடாது, என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை மக்களின் பொழுதுபோக்கு இடமாக மெரினா கடற்கரை திகழ்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வருகிறார்கள். வெளி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வருபவர்களும், சுற்றுலா பயணிகளும் மெரினா கடற்கரையின் அழகை ரசித்து வருகிறார்கள்.

கடற்கரைக்கு பொதுமக்கள் கார், வேன், பஸ், பைக்குகளில் வந்து செல்கிறார்கள். மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் அவர்களது வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு மெரினா கடற்கரைக்கு வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் விதமாக ‘பார்க்கிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம்’ என்ற பெயரில் புதிய வாகனம் நிறுத்தும் வசதிகள் சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றை பராமரிக்க தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனியாருக்கு விடப்பட்ட ஒப்பந்தம் முடிவடைந்த போதும், அங்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணங்களை தனியார் ஒப்பந்த நிறுவனம் வசூலித்து வந்தது. ஒப்பந்த காலத்தில், இருசக்கர வாகனங்களுக்கு 1 மணி நேரத்துக்கு ரூ.5, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கவும் மாநகராட்சி உத்தரவிட்டு இருந்தது. ஆனால் இது தொடர்பான அறிவிப்பு பலகையை மெரினா வாகன நிறுத்துமிடத்தில் எங்கும் வைக்கப்படவில்லை.

அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் ரூ.15 கூடுதலாக சேர்த்து ரூ.30 வரை வசூலித்து வந்தனர். வசூலிக்கும் கட்டணத்திற்கு ரசீதும் தரப்படுவதில்லை. இந்நிலையில், மெரினா கடற்கரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திராவை சேர்ந்த கார் ஓட்டுநரிடம் ரூ.300 கட்டணம் கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால் தாக்கியுள்ளனர். மெரினா கடற்கரையில் அண்மைக் காலமாக பேருந்து, வேன்களுக்கு ரூ.400 வரையும், கார்களுக்கு ரூ.100 முதல் ரூ.300 வரையும், 2 சக்கர வாகனங்களுக்கு ரூ.30 வரையும் கட்டணம் வசூலித்ததாகவும், அதற்கு ரசீதும் கொடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

தற்போது விடுமுறை தினம் என்பதால் மெரினாவில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இவர்களில் வெளிமாநில, வெளிநாட்டினரை ஒப்பந்த நிறுவனம் குறி வைத்து வசூல் வேட்டையில் ஈடுபட்டனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த 2 நாட்களுக்கு முன், படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பேரில், மெரினா வாகன நிறுத்த இடத்தில், ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் வரையில் கட்டணம் வசூலிக்க கூடாது, என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், ‘‘மெரினா கடற்கரையில், TOORQ மீடியாவுடன் ஒப்பந்தம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்டது. அந்த ஒப்பந்தம் எப்போதோ முடிந்துவிட்டது. ஒப்பந்தம் முடிந்ததற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு மெரினா பார்க்கிங் பகுதியில் கட்டணம் வசூலிக்க அனுமதி இல்லை. புதிதாக ஒப்பந்தம் விட மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுவரை கட்டணம் வசூலிக்க கூடாது. அதை மீறி வசூலில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

The post புதிய ஒப்பந்ததாரரை நியமிக்கும் வரை மெரினா பார்க்கிங் பகுதியில் கட்டணம் வசூலிக்க தடை: மாநகராட்சி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Marina beach ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?