×

அரசுப்பணிகளில் சேருபவர்களின் சான்றிதழ் உண்மைத்தன்மையை சரிபார்க்க எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது: உயர்கல்வி நிறுவனங்களுக்கு யூஜிசி உத்தரவு

சேலம்: நாடு முழுவதும் அரசுப்பணிகளில் சேருபவர்களின் சான்றிதழ் உண்மைத் தன்மையை சரிபார்க்க, எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது என பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு யூஜிசி உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு துறைகளில், காலியாக உள்ள இடங்களுக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசின் சார்பில், ஆண்டுதோறும் ஆட்தேர்வு நடக்கிறது. இவ்வாறு பணியில் சேர்பவர்களின் கல்வி சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை, ஆட்தேர்வின் போது பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, இளங்கலை, முதுநிலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம் மற்றும் பல்வேறு இதர பயிற்சிகளுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகிறது. தொடர்ந்து பணியில் சேர்ந்த பின்னர், அவர்களின் கல்விச்சான்றிதழ்களின் உண்மை தன்மை சான்றிதழ்களை பெற்று, பணி பதிவேட்டில் இணைக்கப்பட வேண்டும். இதில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ்களுக்கு, அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இலவசமாக விண்ணப்பித்து, உண்மை தன்மை சான்றிதழ் பெறலாம்.

அதே சமயம், கல்லூரி சான்றிதழ்களுக்கு, சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக ரூ.300 முதல் ரூ.1,000 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனை சம்மந்தப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களின் பெயரில், டிடி எடுத்து செலுத்த வேண்டும். வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் உயர்கல்வி படிப்பவர்களும், இதே நடைமுறையை பின்பற்றி, உண்மை தன்மை சான்றிதழ்களை பெற வேண்டும். இதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுபோன்று சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க, சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள், எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது என பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் மனிஷ் ஜோஷி, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் அரசுப் பணியில் நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகளின் கல்வித்தகுதியை உறுதிப்படுத்துவதற்கு, அவர்களின் கல்வித் தகுதிச் சரிபார்ப்பு நடவடிக்கை ஒரு முன்நிபந்தனையாக உள்ளது. பணியில் சேர்பவர்களின் கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மையை உறுதி செய்வது, அரசின் நலனுக்கு அவசியமானது. எனவே, இந்த சரிபார்ப்பை கட்டணமின்றி, இலவசமாக செய்வது தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உட்பட ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்கும் கடமையாக இருக்க வேண்டும்.

இதனிடையே, பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வின் மூலம், புதிதாக பணியமர்த்தப்பட்ட உதவிப் பிரிவு அலுவலர்களின் கல்விச் சான்றிதழ் சரிபார்ப்புக்கு, சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், பலமுறை கட்டணம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பணியாளர் தேர்வாணையம் புதிதாக பணியமர்த்தப்பட்ட உதவி பிரிவு அலுவலர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை, எந்தவொரு அமைச்சகம் மற்றும் துறையும் சரிபார்ப்பை மேற்கொள்வதற்காக கோரிக்கை விடுக்கும் போதெல்லாம், உயர்கல்வி நிறுவனங்கள் இலவசமாக சரிபார்க்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசுப்பணிகளில் சேருபவர்களின் சான்றிதழ் உண்மைத்தன்மையை சரிபார்க்க எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது: உயர்கல்வி நிறுவனங்களுக்கு யூஜிசி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : UGC ,Salem ,Dinakaran ,
× RELATED யு.ஜி.சி. நெட் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு