×

பேருந்துக்கு காத்திருந்த இளம்பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு: வாலிபர் வெறிச்செயல்

சேலம்: சேலம் 4 ரோட்டில் பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணை அரிவாளால் சரமாரியாக வெட்டிய வாலிபரை சுற்றி வளைத்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த பெண், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் பிரியா (29). இவருக்கும், விஜயகணேஷ் என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். விஜயகணேஷ் 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் பிரியா பெரமனூரில் உள்ள ஒரு பிரியாணி கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

அப்போது, வீராணம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் கோகுல் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த நிலையில், பிரியா வேறு ஒருவருடன் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், பிரியா மீது கோகுல் சந்தேகப்பட்டு வந்துள்ளார். இது சம்மந்தமாக இருவருக்கும் இடையே கடந்த இரு மாதங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டதால் பேசாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு, பிரியா வேலை முடிந்து பஸ்சுக்காக 4 ரோடு பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தார். அப்போது, அங்கு டூவீலரில் வந்த கோகுல், வாகனத்தை நிறுத்தி விட்டு, அரிவாளுடன் பஸ் ஸ்டாப்புக்கு வந்தார். அங்கு பஸ்சுக்கு காத்திருந்த பிரியாவின் கழுத்து, தலை, நெற்றி உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினார்.

இதில், பிரியா அலறியபடி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதை கண்ட பஸ் ஸ்டாப்பில் இருந்த பொதுமக்கள், கோகுலை சுற்றி வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதுகுறித்த தகவலின் பேரில், அங்கு விரைந்து வந்த பள்ளப்பட்டி போலீசார், கோகுலை மீட்டு விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். மேலும், படுகாயமடைந்த பிரியாவை, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆட்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில், பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணை, வாலிபர் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பேருந்துக்கு காத்திருந்த இளம்பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு: வாலிபர் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem 4 road ,Salem Government Hospital ,Priya ,Salem Pallapatti.… ,
× RELATED ஆதரவற்ற பெண்ணுக்கு தங்குமிடம் கேட்டு மனு