- பிரதமர் மோடி
- கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம்
- தில்லி
- நாகர்கோவில்
- மோடி
- விவேகானந்தர் ஹால்
- கன்னியாகுமரி கடல்
நாகர்கோவில்: கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி இன்று 3வது நாளாக தியானம் செய்து வருகிறார். இன்று மாலை தியானத்தை முடித்துவிட்டு டெல்லிக்கு செல்கின்றார். நாடாளுமன்ற இறுதி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் கடந்த 30ம்தேதி மாலை நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து அன்றைய தினம் மாலை பிரதமர் மோடி, 3 நாள் தியானத்துக்காக கன்னியாகுமரியில் நடுக்கடலில் உள்ள சுவாமி விவேகானந்தர் தியான மண்டபத்திற்கு வந்தார். அங்கு விவேகானந்தரை வணங்கிவிட்டு தியானத்தை தொடங்கினார். நேற்று 2வது நாளாக காவி வேஷ்டி, சட்டை, துண்டு என்று அணிந்து, துறவி போல் கையில் ருத்ராட்ச மாலையுடன் சூரிய நமஸ்காரம் செய்த மோடி அதன் பிறகு காலை 7.25 மணிக்கு தியான மண்டபத்துக்குள் சென்ற மோடி அதன் பிறகு வெளியே வரவே இல்லை.
இரவிலும் அவர் தியான மண்டபத்தில் தான் இருந்தார். இரவில் தியான மண்டபத்துக்குள் போடப்பட்டுள்ள சாய்வு நாற்காலியில் சிறிது நேரம் அமர்ந்து இருந்தார். அவர் இளநீர், வெந்நீர், பழங்கள் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டார். இந்தநிலையில் இன்று காலை 5.45 மணிக்கு தியான மண்டபத்தில் இருந்து பிரதமர் மோடி வெளியே வந்தார். அவர் நேற்றைய தினம் போல் காவி உடை தான் அணிந்திருந்தார். தியான மண்டபத்தில் இருந்து வெளியே வந்த அவர் நேராக சூரிய உதயத்தை பார்வையிட்டார். பின்னர் கமண்டலத்தில் உள்ள நீரை ஊற்றி சூரிய நமஸ்காரம் செய்தார்.சிறிது நேரம் சூரியனை வணங்கியபடி நின்ற அவர் அங்கிருந்து விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்று வணங்கினார். பின்னர் பாதம் மண்டபத்திற்கும் சென்று தரிசனம் செய்தார்.
2 இடங்களிலும் சிறிது நேரம் கண்ணை மூடி அமர்ந்து தியானம் மேற்கொண்ட அவர் பின்னர் வெளியே வந்து சிறிது நேரம் மந்திரங்களை உச்சரித்த படி நடைப்பயிற்சி மேற்கொண்டார். பின்னர் காலை 7.30க்கு தியான மண்டபத்திற்கு சென்றார். மோடி தியான மண்டபத்திலிருந்து இன்று காலை 5.45 மணிக்கு வெளியே வந்ததைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அங்கு சூரிய உதயத்தை பார்வையிட இருந்த சுற்றுலா பயணிகளை கடலில் இறங்க அனுமதிக்கவில்லை. கடற்கரையில் உள்ள 16ம் கால் மண்டபத்திற்கும், திரிவேணி சங்கமத்திற்கும் சுற்றுலாப் பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பிரதமர் மோடி தியான மண்டபத்துக்குள் சென்ற பின்னரே கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளை அனுமதித்தனர். இன்று மாலை 3 மணிக்கு தியானத்தை நிறைவு செய்துவிட்டு கன்னியாகுமரியில் இருந்து மோடி புறப்படுகிறார். அப்போது அவர் கடல் நடுவே அமையப்பெற்றுள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையையும் பார்வையிடுகிறார்.
பின்னர் மாலை 4.05 மணிக்கு திருவனந்தபுரத்துக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். பிரதமர் மோடி தியானம் செய்வதையொட்டி கடல் பகுதிகளிலும், வான் வெளியிலும், தரை பகுதியிலும் இன்று 3வது நாளாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்பகுதியில் இந்திய கப்பற்படைக்கு சொந்தமான கப்பல் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கடலோர காவல் படையினரும் அதிநவீன படகுகளில் ரோந்து சுற்றி வருகின்றனர். ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமிட்டு கண்காணிப்பு பணியை மேற்கொள்கிறது. இன்றும் கப்பல் படைக்கு சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமிட்டு கண்காணித்தன.கன்னியாகுமரியில் இன்று படகு போக்குவரத்து காலை 8 மணிக்கு வழக்கம் போல் தொடங்கியது. ஆதார் எண் பதிவு செய்த பின் சுற்றுலாப் பயணிகளை படகு போக்குவரத்திற்கு அனுமதித்தனர். செல்போன் மட்டுமே கொண்டு செல்ல அனுமதித்தனர்.
The post கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் 3 வது நாளாக பிரதமர் மோடி தியானம்; இன்று மாலை டெல்லி செல்கிறார் appeared first on Dinakaran.