×

பழைய மேம்பாலத்தை இடித்துவிட்டு கட்ட முடிவு: தெற்குவாசலில் புதிய மேம்பாலம் அமைகிறது: ரயில்வே நிர்வாகத்திற்கு நெடுஞ்சாலைத்துறை பரிந்துரை

மதுரை: தெற்குவாசல்-வில்லாபுரம் மேம்பாலத்திற்கு பதில் புதிதாக நான்குவழிச் சாலை மேம்பாலம் கட்ட ரயில்வே நிர்வாகத்திற்கு நெடுஞ்சாலைத்துறை பரிந்துரை விடுத்துள்ளது. தென் மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களாலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளிலிருந்து வரும் வாகனங்களாலும், மதுரை நகரில் உள்ள பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

அதற்கேற்ப பிரதான சாலைகளை விரிவுபடுத்துவது, தேவைப்படும் இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்டுவது, பழைய மேம்பாலங்களை அகற்றி புதிய மேம்பாலங்கள் கட்டுவது போன்ற பணிகள் நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்படுகிறது. இதில், 1989ம் ஆண்டு ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் 500 மீட்டர் நீளம் மற்றும் 12 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்ட தெற்குவாசல்- வில்லாபுரம் இடையிலான இருவழித்தட மேம்பாலத்திற்கு பதிலாக, புதிய மேம்பாலம் கட்ட வேண்டுமென்ற கோரிக்கையை நெடுஞ்சாலைத்துறை பரிசீலனைக்கு ஏற்றுள்ளது.

மதுரை – ராமேஸ்வரம் மின்மயமாக்கப்பட்ட ரயில்வே வழித்தடத்தில் நடைபெறும், ரூ.80 கோடி மதிப்பிலான மின்பாதை மறுசீரமைப்பு பணிகளுக்காக, இப்பாலத்தின் உயரத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதால், அப்பணிகளை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் தரப்பில், நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை வைத்திருந்தது. இதையேற்ற நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் பழைய பாலத்தை உயர்த்தி அமைப்பதை விட, அதை இடித்துவிட்டு புதிதாக நான்கு வழிச்சாலை மேம்பாலம் அமைக்கலாம் என, ரயில்வே நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

இது குறித்து, மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், மறுசீரமைப்பு பணிகளுக்காக மேம்பாலத்தின் கீழ் பகுதியில், உயர் அழுத்த மின்வடங்கள் மற்றும் அதற்கேற்ற மின்கம்பங்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காக, மேம்பாலத்தின் மைய பகுதியின் உயரத்தை, தற்போதுள்ள உயரத்திலிருந்து இரண்டு செ.மீ வரை அதிகரிக்க வேண்டும். இதற்காகவே, நெடுஞ்சாலைத்துறையிடம் பாலத்தின் உயரத்தை அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இப்பரிசீலனையை ஏற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பாலத்தின் மைய பகுதி உயரத்தை அதிகரிக்கும்போது, இரண்டு பகுதிகளிலும் உயரத்தை அதிகரிக்க வேண்டுமென கூறியுள்ளனர். அதேநேரம், ஏற்கனவே உள்ள பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிதாக நான்குவழிச்சாலை வடிவிலான மேம்பாலம் கட்ட வேண்டுமென பரிந்துரை செய்துள்ளனர். நான்கு வழிப்பாதையுடன் புதிய மேம்பாலம் அமைக்கும் முன், பழைய மேம்பாலத்தின் ஸ்திரத்தன்மையை நெடுஞ்சாலைத்துறை ஆய்வு செய்தே முடிவெடுக்க முடியும்.

அவ்வாறு, நான்கு வழிப்பாதை மேம்பாலம் அமைய வேண்டுமென்றாலும், அதற்கு அரசின் நிர்வாக ஒப்புதல் கிடைத்து, நிதி ஒதுக்கப்பட்டால் தான் மேம்பாலம் கட்ட முடியும். ஒரு வேளை ஒதுக்கப்படும் நிதியில் மாற்றம் நிகழ்ந்தால், நான்கு வழிப்பாதைக்கு பதிலாக தற்போதுள்ள பாலத்தின் அருகிலேயே இருவழிப்பாதையுடன் கூடிய புதிய மேம்பாலமே கட்டப்படும். எங்கள் தரப்பலிருந்து எந்த வடிவில் பாலம் அமைக்க, மாநில அரசு நிர்வாக ஒப்புதல் அளித்தாலும் அதை செயல்படுத்த தயாராக உள்ளோம் என்றனர்.

* விரைவில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும்
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ரயில்வே நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று, பழைய பாலத்தின் உயரத்தை அதிகரித்து கட்ட ரூ.2 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. பணத்தை ரயில்வே நிர்வாகம் கட்டிவிட்டால், பாலத்தை உயர்த்தி அமைக்கும் பணிகள் துவங்கும். அதேநேரம், பழைய பாலத்தின் அருகிலேயே புதிதாக இருவழிப்பாதை மேம்பாலம் கட்ட திட்ட அறிக்கையும் தயார் செய்து வருகிறோம். அப்பாலம் கட்டப்பட்டால், நேரெதிர் திசையில் ஒரு வழிப்பாதையுடன் கூடிய மேம்பாலங்களாக இரண்டும் அமையும். விரைவில் திட்ட அறிக்கையை தயாரித்து, அரசுக்கு கருத்துரு அனுப்ப உள்ளோம்’’ என்றனர்.

The post பழைய மேம்பாலத்தை இடித்துவிட்டு கட்ட முடிவு: தெற்குவாசலில் புதிய மேம்பாலம் அமைகிறது: ரயில்வே நிர்வாகத்திற்கு நெடுஞ்சாலைத்துறை பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Highways department ,Madurai ,Railway Administration ,South Vasal-Villapuram ,Tamil Nadu ,gate ,Dinakaran ,
× RELATED நெடுஞ்சாலைத்துறையினர் கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்