×

வெயில் சுட்டெரிப்பதால் பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வெயில் மற்றும் வெப்பம் காரணமாக மாணவர்கள் நலன் கருதி, அனைத்து வகை பள்ளிகளும் 10ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் மே மாதம் முதல் கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மீண்டும் 2024-25ம் கல்வி ஆண்டுக்காக பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நாடு முழுவதும் நடப்பதை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அதனால், பள்ளிகள் திறப்பு ஜூன் 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், பள்ளிகள் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கியுள்ளது. இருப்பினும் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் வெப்பம் அதிகரித்து சில மாநிலங்களில் இயல்பைவிட மிகக் கூடுதலாக 127 டிகிரி வரை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதனால் குறிப்பிட்ட சில மாநிலங்களில் பள்ளிகள் திறப்பது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வட மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக 106 டிகிரி முதல் 108 டிகிரி வரையில் வெயில் கொளுத்தி வருகிறது. பொதுமக்கள் வெளியில் வரஅச்சப்பட்டு வீடுகளில் முடங்கியுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பதை பள்ளிக் கல்வித்துறை ஒத்தி வைத்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் நேற்று அறிவிப்பு வெளியிட்டனர். அத்துடன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர் அறிவிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் நிலவும் கடும் வெப்ப அலையின் காரணமாக அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை ஜூன் 9ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. மீண்டும் அனைத்து வகை பள்ளிகளும் 10ம் தேதி திறக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடப்பதை தொடர்ந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு முதலில் ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
* சில மாநிலங்களில் இயல்பைவிட மிக கூடுதலாக 127 டிகிரி வரை வெயில் சுட்டெரித்து வருவதால் குறிப்பிட்ட சில மாநிலங்களில் பள்ளிகள் திறப்பது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டிலும் வடமாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக வெயில் கொளுத்தி வருவதால் பள்ளிகள் திறப்பு வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post வெயில் சுட்டெரிப்பதால் பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : School Education Department ,CHENNAI ,Tamil Nadu ,Department of School Education ,Dinakaran ,
× RELATED தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு