×

மக்களவை தேர்தலுடன் பேரவை தேர்தல் நடந்த அருணாச்சல், சிக்கிமில் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை


புதுடெல்லி: மக்களவை தேர்தலுடன் சட்டப் பேரவைக்கு தேர்தல் நடந்த அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிமில் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதனால் மேற்கண்ட மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாடாளுமன்ற 18வது மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, சிக்கிம், ஒடிசா, அருணாச்சல பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களுக்கும் சட்டப் பேரவைகள் தேர்தல்கள் நடந்தன.

இவற்றில் தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவை தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப். 19ம் தேதி நடைபெற்றது. அருணாச்சல் பிரதேசத்தில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 2 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. இதில், பாஜக 60 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிட்டது.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் 34 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 29 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், அருணாச்சல மக்கள் கட்சி (பிபிஏ) 2 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
அருணாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல்வர் பெமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனால் மீதமுள்ள 50 தொகுதிகளில் கடந்த ஏப். 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.

இதேபோல் சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபைக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா சார்பில் மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங், சோரெங்-சாகுங், ரெனோக் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். சோரெங்-சாகுங் தொகுதியில் முதல்வரின் மகன் ஆதித்யா கோலே தற்போது எம்எல்ஏவாக உள்ளார். அவருக்கு வேறு தொகுதியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

நாம்சி-சிங்கிதாங் தொகுதியில் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்டிஎஃப்) கட்சித் தலைவர் பவன் குமார் சாம்லிங்குக்கு எதிராக முதல்வரின் மனைவி கிருஷ்ண குமாரி ராய் களமிறக்கப்பட்டுள்ளார். ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா மற்றும் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆகியவை அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளன.

அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநில சட்டப் பேரவையின் பதவிக்காலம் ஜூன் 2ம் தேதியுடன் முடிவடைவதால், அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என்பது விதிமுறையாகும். அதனால் ஜூன் 4ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பாக வரும் ஜூன் 2ம் தேதியே (நாளை மறுநாள்) அருணாச்சல் பிரதேசத்தின் 2 மக்களவை, சட்டப் பேரவை வாக்குகள் மற்றும் சிக்கிமின் ஒரு மக்களவை, சட்டப் பேரவை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்குமா? எதிர்கட்சியான காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுமா? என்பது கேள்வியாக உள்ளது. அதேபோல் சிக்கிமில் ஆளுங்கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மீண்டும் ஆட்சியை தக்கவைக்குமா? அல்லது ஆட்சியை பறிகொடுக்குமா? என்பதும் நாளை மறுநாள் எண்ணப்படும் வாக்கு எண்ணிக்கை முடிவில் தெரிந்துவிடும். ஜூன் 4ம் தேதி ேதர்தல் முடிவுகள் வெளியாகும் முன் அருணாச்சல், சிக்கிமில் தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

The post மக்களவை தேர்தலுடன் பேரவை தேர்தல் நடந்த அருணாச்சல், சிக்கிமில் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை appeared first on Dinakaran.

Tags : Arunachal, Sikkim ,Lok Sabha elections ,New Delhi ,Arunachal Pradesh ,Sikkim ,Assembly ,18th Lok Sabha Election ,Lok Sabha election ,Dinakaran ,
× RELATED பாடப்புத்தகங்களில் நாட்டின் பெயரை...