×

பாடப்புத்தகங்களில் நாட்டின் பெயரை குறிப்பிட இந்தியா, பாரதம் என்ற 2 வார்த்தைகளும் பயன்படுத்தப்படும்: என்சிஇஆர்டி தலைவர் தகவல்

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கு முன்னதாக ஆளும் பாஜவை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தன. இந்த கூட்டணிக்கு ‘இந்தியா கூட்டணி’ என பெயர் வைக்கப்பட்டது. இந்நிலையில் பாஜ தலைவர்கள் பாரதம் என்பதே நாட்டின் உண்மையான பெயர் என்றும், அதனை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்த தொடங்கினார்கள். ஒன்றிய அரசும் இந்தியா என்ற வார்த்தையை தவிர்த்து பாரதம் என பயன்படுத்த தொடங்கியது. பாரத் என்ற பெயர் முதன் முதலில் கடந்த ஆண்டு ஜி20 அழைப்பிதழ்களில் பயன்படுத்தப்பட்டது.

இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதிலாக பாரதத்தின் ஜனாதிபதி என குறிப்பிடப்பட்டு இருந்தது. பின்னர் டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடிக்கு முன் வைக்கப்பட்ட பெயர் பலகையில் இந்தியா என்ற வார்த்தைக்கு மாறாக பாரத் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனிடையே பள்ளி பாடப்புத்தகத்தை திருத்துவதற்காக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மூலமாக அமைக்கப்பட்ட சமூக அறிவியலுக்கான உயர்மட்ட குழுவானது அனைத்து பாடப்புத்தகங்களிலும் இந்தியா என்று இருப்பதை பாரதம் என்று மாற்ற வேண்டும் என்று கடந்த ஆண்டு பரிந்துரை செய்தது.

இது தொடர்பாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தலைவர் தினேஷ் பிரசாத் சக்லானி கூறுகையில்,‘‘பாடப்புத்தகங்களில் இந்தியா, பாரதம் என்ற இரண்டு வார்த்தைகளும் பயன்படுத்தப்படும். இந்தியா, பாரதம் மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை.இது ஒன்றுக்கொன்று மாறக்கூடியது.நமது அரசியலமைப்பு சட்டம் என்ற சொல்கிறதோ அதையே நாங்கள் நிலைநாட்டுகிறோம். பாரதத்தை பயன்படுத்தலாம். இந்தியாவையும் பயன்படுத்தலாம். அதனால் என்ன பிரச்னை? பாடப்புத்தங்களில் ஏற்கனவே இரண்டு வார்த்தைகளும் பயன்படுத்தப்படுவதை நீங்கள் பார்க்கலாம். புதிய பாடப்புத்தகங்களிலும் இது தொடரும். இது ஒரு பயனற்ற விவாதமாகும்” என்றார்.

The post பாடப்புத்தகங்களில் நாட்டின் பெயரை குறிப்பிட இந்தியா, பாரதம் என்ற 2 வார்த்தைகளும் பயன்படுத்தப்படும்: என்சிஇஆர்டி தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,Bharat ,NCERT ,NEW DELHI ,BJP ,Lok Sabha elections ,India Alliance ,
× RELATED நாளை முதல் மதுரையில் இருந்து திருச்சி...