×

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக மீண்டும் களம் காண்பது இனிதானது: ரிஷப் பந்த்

நியூயார்க்: டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக மீண்டும் களம் காண்பது இனிதானது என ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். சுமார் 527 நாட்களுக்கு பிறகு மீண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட உள்ளார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த். கடந்த 2022 டிசம்பரில் கார் விபத்தில் சிக்கி, மிக மோசமாக காயமடைந்த நிலையில் தற்போது அணியில் கம்பேக் கொடுத்துள்ளார். இறுதியாக கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் சீசனில் அவர் விளையாடுவார் என டெல்லி அணி அறிவித்தது. அதில் 13 போட்டிகளில் ஆடி, 446 ரன்கள் குவித்தார். 11 கேட்ச் மற்றும் 5 ஸ்டம்பிங் மேற்கொண்டிருந்தார்.

டெல்லி அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். அதன் காரணமாக நடப்பு டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார். “இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து மீண்டும் களம் காண்பது இனிதானது. நிச்சயம் அது வித்தியாசமான உணர்வினை தரும். இதைத்தான் நான் ரொம்பவே மிஸ் செய்தேன். இங்கிருந்து சிறந்த முறையில் எனது பயணம் இருக்கும் என நம்புகிறேன். சக அணி வீரர்களுடன் மீண்டும் இணைந்து நேரம் செலவிடுவதை அதிகம் விரும்புகிறேன்.

நாங்கள் சில நாடுகளில் ஆடி பழக்கப்பட்டு உள்ளோம். ஆனால், இது வித்தியாசமானது. உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டு வளர்ச்சி கண்டு வருகிறது. அந்த வகையில் இந்த தொடர் அமெரிக்க கிரிக்கெட்டுக்கும் நலன் சேர்க்கும். இங்கு புதிய ஆடுகளங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. நான் சூழலுக்கு ஏற்ப தயாராகி வருகிறேன். அனைத்தும் எப்படி செல்கிறது என்பதை பார்க்க வேண்டி உள்ளது” என பந்த் தெரிவித்துள்ளார்.

The post டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக மீண்டும் களம் காண்பது இனிதானது: ரிஷப் பந்த் appeared first on Dinakaran.

Tags : India ,T20 World Cup ,Rishabh Pant ,New York ,cricket team ,Dinakaran ,
× RELATED டி-20 உலக கோப்பை கிரிக்கெட்டில்...