×

செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு: கிடப்பில் உள்ள மனுக்களுக்கு தீர்வுகாண உத்தரவு

 

செங்கல்பட்டு, மே 31: செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டு கிடப்பில் போடப்பட்டுள்ள பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும், என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நேற்று செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பட்டா மாற்றம் மற்றும் முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்பட்டது. மேலும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து செங்கல்பட்டு வட்டாட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் நேரில் வர வேண்டும், என்று மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார். மேலும், அரசுத்துறை அலுவலர்கள், ஊழியர்களின் வருகைப் பதிவேட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதில், ஒரு சில பணியாளர்கள் மாதந்தோறும் சம்பளம் பெற்றுக் கொண்டு பணிக்கே வராமல் டிமிக்கி கொடுத்து வந்ததும், அதற்கான மெமோவை வாங்க மறுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், அரசுத்துறை அதிகாரிகளான தங்களிடம் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால்தான், அவர்களுக்கு நம்மீது நம்பிக்கை வரும். எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள பொதுமக்களின் மனுக்களுக்கு மீது உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும்.

இனியும் இதுபோன்ற தவறுகள் நடந்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்று அதிகாரிகளை எச்சரித்தார். கலெக்டரின் திடீர் ஆய்வு காரணமாக செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் நேற்று மாலை அவசர அவசரமாக கிடப்பில் போடப்பட்டிருந்த அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வுப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டால் வட்டாட்சியர் அலுவலகங்களில் கோப்புகள் கிடப்பில் போடப்படுவது தடுக்கப்படும், என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு: கிடப்பில் உள்ள மனுக்களுக்கு தீர்வுகாண உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu District Office ,Chengalpattu ,Arunraj ,Chengalpattu District Collector's Office ,Chengalpattu District Collector ,Dinakaran ,
× RELATED ‘அக்னிவீர்’ வாயு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட கலெக்டர் தகவல்