×

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 57 ஐஏஎஸ் அதிகாரிகள் பொது பார்வையாளர்களாக நியமனம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வெளிமாநிலங்களை சேர்ந்த 57 ஐஏஎஸ் அதிகாரிகளை வாக்கு எண்ணிக்கையின்போது பொது பார்வையாளர்களாக நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், இறுதிகட்ட தேர்தல் நாளை (ஜூன் 1) நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட 39 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் வாக்குகள் எண்ணும் பணி ஜூன் 4ம் தேதி (செவ்வாய்) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணப்படும்போது, ஒவ்வொரு மையத்திலும் சட்டப்பேரவை தொகுதிவாரியாக தனித்தனியாக அமைக்கப்பட்ட அறைகளில், மின்னணு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு அவற்றில் உள்ள வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு அறையிலும் குறைந்தபட்சம் 14 மேஜைகள் வாக்கு எண்ணிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ளன.

வேட்பாளர்கள் எண்ணிக்கை, வாக்குப்பதிவு அதிகரித்த இடங்களில் கூடுதல் மேஜைகள் போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 234 வாக்கு எண்ணிக்கை அறைகளில் 3,300 மேஜைகள் போடப்பட்டுள்ளன. இதுதவிர, வாக்கு எண்ணிக்கை பணியில் 10 ஆயிரம் அலுவலர்கள், 24 ஆயிரம் உதவியாளர்கள், 4,500 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரு தொகுதிக்கு 5 முதல் 22 பேர் வரை தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உதவும் வகையில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, சிறப்பு வட்டாட்சியர் அளவில் பல்வேறு துறைகளில் இருப்பவர்கள் இந்த பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கன்னியாகுமரி தொகுதியில் 22 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 39 தொகுதிகளுக்கான வெளிமாநில பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அதன்படி, 39 தொகுதிகளுக்கு வெளி மாநிலங்களில் பணியாற்றி வரும் 57 ஐஏஎஸ் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக நியமனம் செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை உட்பட 16 தொகுதிகளுக்கு தலா 2 பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் 3 பேர் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தேர்தல் வாக்குப்பதிவின்போது பணியாற்றிய 39 ஐஏஎஸ் அதிகாரிகளும் அடங்குவர். அதேபோன்று, ஒரு வாக்குப்பதிவு மையத்தில் 500க்கும் மேற்பட்ட தபால் வாக்குகள் இருந்தால் கூடுதலாக ஒரு மேஜை போடவும், அங்கு கூடுதலாக ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலகர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் நேற்று அனுமதி அளித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் 39 வாக்குப்பதிவு மையங்களில் மொத்தம் 349 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.

 

The post வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 57 ஐஏஎஸ் அதிகாரிகள் பொது பார்வையாளர்களாக நியமனம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : IAS ,Election Commission of India ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான...