×

தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை 2.65 லட்சம் தொழிலாளர்கள் பயன்: சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்

சென்னை: தொழிலாளர்களைத் தேடி மருத்துவம்” என்ற திட்டத்தின் மூலம் இதுவரை 2.65 லட்சம் தொழிலாளர்கள் பயனடைந்துள்ளதாகவும், 50 லட்சம் தொழிலாளர்களை பரிசோதிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தொடங்கப்பட்ட ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற சிறப்பான திட்டம், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, தொழிலாளர்களைத் தேடி மருத்துவம் என்ற புதிய திட்டம் கடந்த ஜனவரி மாதம் அரசால் தொடங்கப்பட்டது.

இதன்மூலம் மருத்துவக் குழுவினர் தொழிற்சாலைகளுக்கே நேரடியாகச் சென்று, தொழிலாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்கின்றனர். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு போன்ற பாதிப்புகள் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், சேலம், திருச்சி, ராணிப்பேட்டை, திண்டுக்கல், மதுரை ஆகிய 35 மருத்துவ மண்டலங்கள் உள்ளடக்கிய பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்படும். மொத்தம் 31 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் இந்த திட்டம் மூலம் பயன்பெற உள்ளனர்.

முதல்கட்டமாக 35 சுகாதாரத்துறை மாவட்டத்தில் இருக்கும் 6,34,398 தொழிலாளர்களை பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இத் திட்டம் தொடங்கப்பட்ட கிட்டத்தட்ட 5 மாதத்தில் இதுவரை 2,65,468 தொழிலாளர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பரிசோதனையில் தொழிலாளருக்கு நோய் பாதிப்பு அதிகம் இருந்தால் மேல் சிகிச்சைக்கும் பரிந்துரை செய்யப்படுகிறது.

இத்திட்டம் மூலம் 50 லட்சம் தொழிலாளர்களை பரிசோதனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செல்வவிநாயகம் மேலும் கூறியதாவது: தொழிற்சாலைகள் அதிகம் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழிலாளர்களிடையே அதிக பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் பரிசோதனை செய்யப்படும் என்றார்.

The post தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை 2.65 லட்சம் தொழிலாளர்கள் பயன்: சுகாதாரத்துறை இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Health Department ,M.K.Stalin ,Chief Minister of ,Tamil ,Nadu ,Director of Health ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…