×

ஈரோட்டில் துணிகரம் வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் 12 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு

*கொள்ளையனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

ஈரோடு : ஈரோட்டில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் 12 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருடிய கொள்ளையனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஈரோடு, மாமரத்துப்பாளையம், கன்னிமார் நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகன் (45). வெல்டிங் பட்டறை உரிமையாளர். இவரது மனைவி பிரசவத்துக்காக திருச்சியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். கடந்த 2ம் தேதி திருச்சியில் அவருக்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து, சண்முகன், குழந்தை மற்றும் மனைவியை பார்ப்பதற்காக கடந்த 25ம் தேதி திருச்சி சென்றுள்ளார். மனைவி மற்றும் குழந்தையை பார்த்துவிட்டு நேற்று அதிகாலை சுமார் 1 மணியளவில் அவர் வீடு திரும்பினார்.

வீட்டின் அருகே அவர் வந்தபோது, அவரது வீட்டில் லைட் எரிந்து கொண்டிருந்ததை பார்த்தார். சிலர் வீட்டில் இருப்பதும் தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சண்முகன் வீட்டின் பின்பக்கமாக சென்று பார்த்தார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் வீட்டில் கொள்ளையடித்த பொருட்களை ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு தப்பியோட முயன்றனர். இதையடுத்து, சண்முகன் அவர்களை துரத்தி பிடிக்க முயன்றார்.

அப்போது, அவரை கொள்ளையர்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு தாக்க முற்பட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் எழுந்து வந்தனர். அவர்கள் சண்முகனுடன் சேர்ந்து கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 2 கொள்ளையர்களில் ஒருவனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். மற்றொருவன் தப்பி ஓடிவிட்டான்.

பிடிபட்ட கொள்ளையனை சண்முகன் மற்றும் பொதுமக்கள், ஈரோடு வடக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். சண்முகன் தனது வீட்டில் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 12 பவுன் நகை, ரூ. 1 லட்சம் பணம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது. இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து பிடிபட்ட கொள்ளையனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஈரோட்டில் துணிகரம் வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் 12 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Erode ,Shanmukhan ,Kannimar Nagar ,Mamarathuppalayam ,Dinakaran ,
× RELATED சூதாடிய 5 பேர் கைது