×

சென்னையில் வாக்கு எண்ணும் 3 மையங்களில் மொத்தமாக 321 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் : ராதாகிருஷ்ணன்

சென்னை : சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மொத்தம் 922 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில், சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோர் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி, சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே, முன்னிலையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சென்னை ரிப்பன் மாளிகையில், வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாமை மாநகராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

வாக்கு இயந்திரத்தை சீல் பிரிப்பது, வீடியோ செய்வது, முகவர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், “சென்னையில் உள்ள 3 மையங்களில் மொத்தம் 1,433 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் மொத்தம் 265 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். சட்டப்பேரவை தொகுதி அடிப்படையில் ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்படும்: சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் மட்டும் 30 மேஜைகள் அமைக்கப்படும். சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மொத்தம் 922 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். 3 மையங்களில் மொத்தமாக 321 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும். சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் பணிக்கான 2ம் கட்ட பயிற்சி முகாம் ஜூன் 3ம் தேதி நடைபெற உள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post சென்னையில் வாக்கு எண்ணும் 3 மையங்களில் மொத்தமாக 321 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் : ராதாகிருஷ்ணன் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Radhakrishnan ,District Election Officer ,Parliamentary Lok Sabha ,
× RELATED சென்னையில் உள்ள வாக்கு எண்ணும்...