×

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம கோயில் திருவிழாவில் மோதல்; விவசாயியை அடித்துக் கொன்றதாக பெண் இன்ஸ்பெக்டர் காதலனுடன் கைது: சஸ்பெண்ட் செய்து டிஐஜி துரை உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: கோயில் திருவிழாவில் விவசாயி ஒருவரை அடித்துக் கொன்றதாக பெண் இன்ஸ்பெக்டர், காதலனுடன் கைது செய்யப்பட்டார். அவரை சஸ்பெண்ட் செய்து ராமநாதபுரம் டிஐஜி துரை உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அன்னை சத்தியாநகர், இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி அன்னலட்சுமி. இவர்களுக்கு நித்யா, ஸ்வேதா என்ற இரு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 21ம் தேதி இவர்களது சொந்த ஊரில் கோயில் திருவிழா நடந்தது. இரவு 11.45 மணிக்கு முத்துமாரியம்மன் கோயிலில் சாமி கும்பிடச் சென்றுள்ளனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி மற்றும் அவரது மகன்கள் ராஜேந்திரன், ராம்குமார் மற்றும் 2 பெண்கள் சேர்ந்து கோயிலில் சிங்கம் சிலை வைப்பது குறித்து பேசியுள்ளனர். அதற்கு ஊரில் உள்ள பெரியவர்கள், கோயிலில் தனிப்பட்ட முறையில் யாரும் சிங்கம் சிலை வைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அப்போது ராமசாமி குடும்பத்தினர், ராமரிடம், ‘எங்களிடம் கடன் வாங்கிவிட்டு இன்னும் தராமல் இருக்கும் நீ எல்லாம் எங்களை எதிர்த்து பேசுகிறாயா?’ என்று கூறி அவரை அடித்து உதைத்துள்ளனர். அருகில் கிடந்த பொருட்களையும் வைத்து தாக்கி கீழே தள்ளியுள்ளனர்.  தலையில் படுகாயமடைந்த ராமர், மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசில் ராமரின் மனைவி அன்னலட்சுமி புகார் செய்தார்.

இந்தப் புகார் மீது போலீசார் வழக்குப்பதிந்து, ராமசாமி மற்றும் மகன் ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். மற்றொரு மகன் ராம்குமார் மற்றும் அவருடன் தாக்குதலில் ஈடுபட்ட பெண் இன்ஸ்பெக்டர் சத்தியஷீலா ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தநிலையில், அவர்கள் இருவரும் பெங்களூருவில் பதுங்கியிருப்பது தெரியவந்ததும், போலீசார் பெங்களூரு சென்று அவர்களை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ராம்குமாரும், சத்திய ஷீலாவும் திருமணம் செய்யாமல் ஒன்றாக சேர்ந்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் சேர்ந்து வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளனர். ஆரம்பத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளராக ராம்குமார் இருந்துள்ளார். அப்போது அவரைப் பற்றியே தவறாக வீடியோ வெளியிட்டதால் அடித்து விரட்டியுள்ளார்.

அதன்பின்னர், மதுரையைச் சேர்ந்த ஒரு டிஎஸ்பியுடன் டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு, பழக்கமாகியுள்ளார். இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர். டிஎஸ்பியுடன் பழக்கம் இருக்கும்போதே இன்ஸ்பெக்டருடன் ராம்குமார் வாழ்ந்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் டிஎஸ்பிக்கும், ராம்குமாருக்கும் மோதல் ஏற்பட்டபோது அவர், இன்ஸ்பெக்டருடன், ஜீப்பில் ராம்குமாரையும் அழைத்து வந்து தனது அலுவலகத்தில் வைத்து விசாரித்துள்ளார். இரு நாட்கள் விசாரணைக்குப் பிறகு ராம்குமாரை அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கிடையில் பெண் இன்ஸ்பெக்டர் மீது தொடர்ந்து புகார்கள் வந்ததால், அவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காவல்நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவரை நேற்று சஸ்பெண்ட் செய்து ராமநாதபுரம் டிஐஜி துரை உத்தரவிட்டுள்ளார். அதேநேரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் அவரை கொலை வழக்கிலும் கைது செய்துள்ளனர். கைதான இருவரையும் போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாஜிஸ்திரேட் உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம கோயில் திருவிழாவில் மோதல்; விவசாயியை அடித்துக் கொன்றதாக பெண் இன்ஸ்பெக்டர் காதலனுடன் கைது: சஸ்பெண்ட் செய்து டிஐஜி துரை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : temple festival ,Srivilliputhur ,DIG ,festival ,Ramanathapuram ,Durai ,Annai Satyanagar ,Indira Nagar, Virudhunagar District ,village temple festival ,
× RELATED கலசபாக்கம் அருகே அர்னேசா அம்மன்...