×

வாக்கு எண்ணிக்கையின்போது செயல்படுவது எப்படி? ஜூன் 1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்ைன: நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் 6 கட்ட தேர்தல்கள் முடிவுற்ற நிலையில், அடுத்ததாக இறுதிக்கட்ட தேர்தல் வரும் ஜூன் 1ம் தேதி நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை முதல் கட்டத்தில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிந்து, பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவி பேட் இயந்திரங்கள் ஆகியவை, அந்தந்த தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

அங்கு, 3 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு, சிசிடிவி கண்காணிப்புடன், வேட்பாளர்களின் முகவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வரும் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும், அப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே 8.30 மணிக்கு மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளை தயார்படுத்த தொடங்கியுள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது, திமுக சார்பில் வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து கலந்தாலோசனை நடத்த முடிவு செய்துள்ளது. இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, ஜூன் 4ம்தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து கலந்தாலோசித்திட, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் ‘மாவட்ட செயலாளர்கள், திமுக வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் வரும் ஜூன் 1ம்தேதி சனிக்கிழமை காலை 11 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

இக்கூட்டத்தில் திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி., வாக்கு எண்ணிக்கையின் போது தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்து ஆலோசனை வழங்குவார். அதுபோது மாவட்ட செயலாளர்கள், திமுக வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post வாக்கு எண்ணிக்கையின்போது செயல்படுவது எப்படி? ஜூன் 1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,general secretary ,Duraimurugan ,Chennai ,Tamil Nadu ,DMK District ,Dinakaran ,
× RELATED ஜூன் 15-ல் கோவை கொடிசியா மைதானத்தில்...