×

மிசோரமில் கனமழையால் நிலச்சரிவு 22 பேர் உயிருடன் புதைந்து பலி: கல் குவாரி இடிந்து விபத்து

அய்சால்: மிசோரமில் கனமழையால் கல் குவாரி இடிந்தும், நிலச்சரிவில் சிக்கியும் 22 பேர் உயிருடன் மண்ணில் புதைந்து இறந்துள்ளனர். மேலும் சிலர் மாயமாகி உள்ளனர். மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே ரெமல் புயல் கரையை கடந்ததைத் தொடர்ந்து, அண்டை மாநிலமான மிசோரமில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழை வெள்ளத்தால் மாநிலத்தில் பல பகுதிகளிலும் கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அய்சாலின் புறநகர் பகுதியான மெல்தும், ஹிலிமென் இடையே நேற்று காலை 6 மணி அளவில் கல் குவாரி ஒன்று நிலச்சரிவால் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிறுவன், சிறுமி உட்பட பலர் மண்ணில் உயிருடன் புதைந்தனர். உடனடியாக மீட்புப்படையினர் விரைந்து வந்து 2 பேரை உயிருடன் மீட்டனர். சிறுவன், சிறுமி உட்பட 13 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 8 பேர் மாயமாகி உள்ளனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுதவிர, அய்சாலின் சேலம் வெங் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில், ஒரு கட்டிடம் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதிலிருந்து 3 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

ஹன்தார் உள்ளிட்ட பல பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட நிலச்சரிவால், தலைநகர் அய்சாலில் இருந்து மாநிலத்தின் மற்ற பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் நிலைமையை சமாளிக்க முதல்வர் லால்துஹோமா, உள்துறை அமைச்சர் சப்தங்கா உள்ளிட்டோர் அவசர கூட்டத்தை கூட்டினர். கல் குவாரி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் லால்துஹோமா அறிவித்துள்ளார். மேலும் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளையும் அவர் பார்வையிட்டார். பல விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ஆறுகளில் தொடர்ந்து நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் வீடுகள், தொழிலாளர்கள் தங்கிய கூடாரங்கள் நிலச்சரிவில் மண்ணில் புதைந்த வேறு சில சம்பவங்களில் 9 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே போல் அசாமில் பெய்த கனமழையில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

 

The post மிசோரமில் கனமழையால் நிலச்சரிவு 22 பேர் உயிருடன் புதைந்து பலி: கல் குவாரி இடிந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Mizoram ,Stone quarry ,Aizawl ,Cyclone ,Remal ,West Bengal ,Bangladesh ,Stone ,Dinakaran ,
× RELATED மிசோரம் அதிகாரிகள் குழுவினர் நீலகிரி...