×
Saravana Stores

மிசோரம் அதிகாரிகள் குழுவினர் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க செயல்பாடுகளை ஆய்வு

ஊட்டி : மிசோரம் மாநில விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைப்பதை உறுதிப்படுத்த ஏதுவாக நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மிசோரம் மாநில அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க செயல்பாடுகள் குறித்து மிசோரம் மாநில அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறிகள் மற்றும் சைனீஸ் காய்கறி வகைகள் பயிரிடப்படுகின்றன.

இக்காய்கறி பயிர்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இடைத்தரகர்களின் தலையீடின்றி நியாயமான விலைக்கு காய்கறிகளை ஏல முறையில் விற்பனை செய்யும் பணியை நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் செய்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் சமீபத்தில்பொறுப்பேற்ற புதிய அரசின் முதலமைச்சர் லால்துகோமா தலைமையிலான புதிய அரசு விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன், கூட்டுறவு துறை அமைச்சர் தலைமையில் விவசாய சந்தை உறுதி, நிதி மேலாண்மை குழுமத்தை அமைத்தது. இக்குழு மிசோரம் மாநிலத்தின் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஆசியாவிலேயே மலைப்பகுதியில் மக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தி இடைத்தரகர்களின் பிடியில் இருந்து விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான,லாபகரமான விலை கிடைப்பதை உறுதிப்படுத்தும் பணியை செய்யும் நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்து அவற்றை மிசோரம் மாநிலத்தில் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து மிசோரம் மாநில விவசாயம் மற்றும் தோட்டக்கலைத்துறை சிறப்பு செயலாளர் ராம்டின் லியானி தலைமையில் அம்மாநிலத்தை சேர்ந்த லல்லியன் ஜூவாலா, தோட்டக்கலை இணை இயக்குநர் ராபர்ட் லால்ரிங்சங்கா, கூட்டுறவு துணை பதிவாளர் வாங்லுபுயா,நிலவளம், மண், நீர் பாதுகாப்புத்துறை லால்ரெம்ருவாடி, விவசாயம் மற்றும் விவசாய நலன்துறை துணை இயக்குநர் ஜூலிஜோடின்புய், வணிகம் மற்றும் தொழில்துறை துணை இயக்குநர் ரோனால்ட் லால்ச்சுவானாவ்மா உள்ளிட்ட அதிகாரிகள் நீலகிரி மாவட்டம் வருகை புரிந்தனர்.

அவர்கள் ஊட்டி மார்க்கெட்டில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் காய்கறி சில்லரை மற்றும் ஏல விற்பனை மையத்தை பார்வையிட்டனர். அங்கு, விவசாயிகள் கொண்டு வரும் மலை காய்கறிகளை ஏலம் விடுவது குறித்து கள ஆய்வு மூலம் தெரிந்துகொண்டனர். பின்னர் உருளைகிழங்கு விதை கிடங்கு, உரசேமிப்பு கிடங்குகள், வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

மேலும் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பவர்பாய்ண்ட் விளக்க காட்சி முறையில் விளக்கப்பட்டது. கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தோற்றம், செயல்பாடுகள், வணிகம், விவசாய உற்பத்தி பொருட்கள் சந்தையில் என்சிஎம்எஸ்., வகிக்கும் பங்கு, ஊட்டியில் விளையும் காய்கறிகள், சீன வகை காய்கறிகள் ஆகியவை குறித்தும் பல்வகைப்படுத்துதல் செயல்பாடுகள் குறித்தும் நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தயாளன், துணை பதிவாளர் முத்துகுமார் விளக்கினர்.

இந்த ஆய்வின் போது நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க செயலாளர் கார்த்திகேயன், மேட்டுபாளையம் கிளைமேலாளர் நிஷார், பொது மேலாளர்கள் லல்லி, ஷானவாஷ் உட்பட பலர் உடனிருந்தனர். இணை பதிவாளர் தயாளன் கூறுகையில், மிசோராமில், விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த சிறந்த கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகளை கள ஆய்வு மூலம் விபரங்களை சேகரித்து அங்கு செயல்படுத்த திட்டமிட்டு நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் பற்றி தெரிந்து கொண்டு மிசோரம் அதிகாரிகள் ஊட்டிக்கு வந்தனர். நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க கட்டுப்பாட்டில் உள்ள ஊட்டி, மேட்டுப்பாளையம் விற்பனை சங்கங்களை பார்வையிட்டு இங்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து தெரிந்துகொண்டனர். என்றார்.

The post மிசோரம் அதிகாரிகள் குழுவினர் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க செயல்பாடுகளை ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Mizoram ,Nilgiris Co-operative Sales Society ,Mizoram State ,Nilgiri Cooperative Marketing Society ,Nilgiri Cooperative Sales Association ,Dinakaran ,
× RELATED மிசோரமில் ரூ.86 கோடி போதைபொருள் பறிமுதல்: 2 மியான்மர் நாட்டினர் கைது