×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; ரைபாகினா முன்னேற்றம்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, கஜகஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினா தகுதி பெற்றார். முதல் சுற்றில் பெல்ஜியத்தின் கிரீட் மின்னனுடன் (26 வயது, 85வது ரேங்க்) நேற்று மோதிய ரைபாகினா (24 வயது, 4வது ரேங்க்) 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். அதே வேகத்துடன் 2வது செட்டிலும் கிரீட் மின்னனின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த ரைபாகினா 6-2, 6-3 என நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு முதல் சுற்றில் சீனாவின் கின்வென் ஸெங் (21 வயது, 8வது ரேங்க்) 6-2, 6-1 என்ற நேர் செட்களில் பிரான்ஸ் நட்சத்திரம் ஆலிஸ் கார்னெட்டை (34 வயது, 106வது ரேங்க்) மிக எளிதாக வீழ்த்தினார். முன்னணி வீராங்கனைகள் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), அன்னா கலின்ஸ்கயா (ரஷ்யா), டேனியலி கோலின்ஸ் (அமெரிக்கா), ஐரினா பெகு (ருமேனியா) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நேற்று களமிறங்கிய நார்வே வீரர் கேஸ்பர் ரூட் (25 வயது, 7வது ரேங்க்) 6-3, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் பிரேசிலின் மெலிகெனி ஆல்வ்ஸை (26 வயது, 137வது ரேங்க்) வீழ்த்தினார். அர்ஜென்டினாவின் தாமஸ் மார்டின் எட்ச்வெர்ரி 3-6, 6-2, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்சின் ஆர்தர் கசாக்ஸை வென்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார். முன்னணி வீரர்கள் டேனியல் மெட்வதேவ் (ரஷ்யா), கேல் மான்பில்ஸ் (பிரான்ஸ்), மேட்டியோ அர்னால்டி (இத்தாலி), கரென் கச்சனோவ் (ரஷ்யா) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

 

The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; ரைபாகினா முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : French Open Tennis ,Rybagina ,PARIS ,Kazakhstan ,Elana Rybakina ,French Open Grand Slam tennis ,Belgium ,Creed Minnen ,Dinakaran ,
× RELATED பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பைனல்: ஸ்வியாடெக் – ஜாஸ்மின் இன்று பலப்பரீட்சை