×

நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்; தங்கபாலு உள்பட 32 பேருக்கு சிபிசிஐடி சம்மன்: தினமும் 2 பேரிடம் விசாரிக்க முடிவு

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக விசாரிக்க காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு உள்பட 32க்கும் அதிகமானோருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த 2ம் தேதி மாயமான நிலையில் 4ம் தேதி கரைச்சுத்துபுதூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகேயுள்ள தோட்டத்தில் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் எழுதிய மரண வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது மரணம் குறித்து விசாரிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன், நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் உள்ளிட்டோரிடம் போலீசார் ஏற்கெனவே விசாரணை நடத்தினர். மேலும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தனிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். எனினும் அவரது மரணம் தொடர்பாக எந்த துப்பும் துலங்கவில்லை.

இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக சிபிசிஐடி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை தேடுதல், ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடம் சம்பவத்தன்று நடந்தவற்றை எழுத்துப்பூர்வமாக வாக்குமூலமாக பெறுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சிபிசிஐடி எஸ்பி முத்தரசி நெல்லை வந்து இரண்டு நாட்கள் நேரடி விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் ஜெயக்குமார் மரணம் வழக்கில், ஏற்கனவே போலீசாரால் விசாரிக்கப்பட்ட அவரது உறவினர்கள், தொழில் ரீதியில் அவருடன் பழகிய நண்பர்கள் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர். இதற்காக ஒரு குழு கரைசுத்துபுதூருக்கு சென்று இந்த விசாரணையை மேற்கொண்டது. மேலும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அடங்கிய மற்றொரு குழு ஜெயக்குமாரின் செல்போனுக்கு கடைசி 2 நாட்கள் வந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் விபரங்களை கேட்டறிய முடிவு செய்துள்ளனர்.

இதற்காக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தொழில் அதிபர்கள், உறவினர்கள், நெருக்கமானவர்கள், அரசியல் பிரமுகர்களான தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, முன்னாள் ஒன்றிய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன், நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை டாக்டரும், ஜெயக்குமாரின் உறவினரான செல்வகுமார் உள்ளிட்ட 32 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இதன் அடிப்படையில் தினமும் 2 பேரிடம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகவுள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர். இந்த விசாரணைகள் முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.

The post நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்; தங்கபாலு உள்பட 32 பேருக்கு சிபிசிஐடி சம்மன்: தினமும் 2 பேரிடம் விசாரிக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Congress ,CBCID ,Thangabalu ,Nellai ,Nellai East District Congress ,President ,Jayakumar Thanasingh ,Nellai Congress ,
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்: சிபிசிஐடி ஏடிஜிபி நேரடி விசாரணை