×

பாழடைந்த கட்டிடங்களுக்கு இடையே இயங்கும் கீழ்வேளூர் காவல் நிலையம்

*அச்சத்துடன் பணியாற்றும் காவலர்கள்

*நாகை எஸ்பி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கீழ்வேளூர் : நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் காவல் நிலையத்திற்கு 100 ஆண்டுகளுக்கு முன் சப் இன்ஸ்பெக்டர் அறை, ஆவணங்கள் பாதுகாப்பு அறை, கைதிகளை தற்காலிகமாக அடைத்து வைக்க ஆண், பெண்களுக்கு என தனித்தனி சிறை என அனைத்து வசதியுடன் காவல் நிலையம் கட்டப்பட்டது. இந்த காவல் நிலையம் மேல் பகுதி மழை காலத்தில் நீர் கசிவு ஏற்பட்டு ஆவணங்கள் மழையில் நனையத் தொடங்கியதுடன் அங்கு பணியாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து காவல் நிலையம் அருகே புதிதாக அனைத்து நவின வசதிகளுடன் புதிய காவல் நிலையம் கட்டப்பட்டு கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக பயன் பாட்டில் உள்ளது. இந்நிலையில் காவல் நிலையத்திற்கு மேற்கு பகுதி பழைய காவல் நிலைய கட்டிடமும், கிழக்கு பகுதியில் பாழடைந்த நிலையில் ஆய்வாளர் குடியிருப்பும் உள்ளது.

காவல் நிலையத்தின் இரண்டு பக்கமும் பாழடைந்த நிலையில் உள்ள பழைய காவல் நிலையம், ஆய்வாளர் குடியிருப்பு கட்டிடங்களில் பாம்பு போன்ற விஷ பூச்சிகள் அதிக அளவில் உள்ளது. பாம்புகள் பகல் நேரதில் பாழடைந்துள்ள இரண்டு கட்டிடங்களுக்கு இடைய சென்று வருவதால் காவல் நிலையத்திற்கு வரும் பொது மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் காவல் நிலையத்தில் பகல் நேரத்தில் பொதுமக்கள், சக காவலர்கள் என நடமாட்டம் இருக்கும் நலையில் இரவு நேரத்தில் பெரிய, பெரிய பாம்புகள் சென்று வருவதால் பாம்புகளுக்கு பயந்து காவல் நிலைய கதவுகளை பூட்டிகொண்டு பணியாற்றும் அவல நிலையில் உள்ளனர்.

காவல் நிலையத்தின் இரண்டு பக்கமும் பாழடைந்த கட்டிடங்கள் உள்ளதால் காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களும், காவலர்களும் அச்ச உணர்வுடன் காவல் நிலையத்திற்கு வந்து செல்வின்றனர். இது குறித்து காவல் நிலையத்திற்கு ஆய்வுக்கு வந்த ஐ.ஜி., எஸ்.பி.யிடம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் எடுத்து கூறியுள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

பாழடைந்த கட்டிடங்களாலும், அதில் உள்ள பாம்புகள் போன்ற விஷ பூச்சிகளால் காவல் நிலையத்திற்கு வருபவர்களுக்கும், காவலர்களுக்கும் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காதற்கு முன் உடன் கீழ்வேளூர் காவல் நிலையத்திற்கு இரண்டு பக்கமும் உள்ள பழைய பாழடைந்த நிலையில் உள்ள பழைய காவல் நிலைய கட்டிடம் மற்றும் ஆய்வாளர் குடியிருப்பு ஆகியவற்றை மாவட்ட காவல் காண்காணிப்பாளர் பார்வையிட்டு கட்டிடங்களை இடிக்க ஆவன செய்திட வேண்டும் என்று காவலர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

The post பாழடைந்த கட்டிடங்களுக்கு இடையே இயங்கும் கீழ்வேளூர் காவல் நிலையம் appeared first on Dinakaran.

Tags : Kilvellur Police Station ,Nagai SP ,Kilvellur ,Nagapattinam ,Dinakaran ,
× RELATED கீழ்வேளூர் பகுதியில் மின்விநியோகம் நாளை நிறுத்தம்