×

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த பிரதமர் மோடி, அமித்ஷா? குழப்பத்தில் சிக்கி தவிக்கும் பிசிசிஐ

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு மோடி, அமித்ஷா பெயரில் போலியாக விண்ணப்பங்கள் பதிவு செய்துள்ளனர். கூகுள் விண்ணப்பம் மூலம் பெயர்களை பதிவு செய்ய பிசிசிஐ கூறிய நிலையில் போலி விண்ணப்பங்களால் சர்ச்சை எழுந்துள்ளது. மோடி, அமித்ஷா மட்டுமின்றி சச்சின், தோனி, சேவாக் ஆகியோரின் பெயர்களிலும் போலியாக விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள டிராவிட்டின் பதவிகாலம் வரும் டி20 உலகக் கோப்பை போட்டியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அடுத்த பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ப்ளம்மிங் போன்றோரிடம் பயிற்சியாளர் பதவி தொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் இதை மறுத்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தலைமை பயிற்சியாளர் பதவி தொடர்பாக தாங்கள் ஆஸ்திரேலியாவை சேர்ந்த யாரையும் அணுகவில்லை என தெரிவித்திருக்கிறார். மேலும் அப்பொறுப்புக்கு வருபவர்கள், இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்புகளை முழுமையாக தெரிந்த ஒருவராக இருக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய கொல்கத்தா அணியின் ஆலோசகராக உள்ள கவுதம் கம்பீர் பெயரும் மிகத்தீவிரமாக அடிபட்டன. இத்தகைய சூழலில்தான், “பயிற்சியாளர் பணி தொடர்பாக கவுதம் கம்பீருக்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை; அவ்வாறு உத்தரவாதம் அளிக்கும் பட்சத்தில் கவுதம் கம்பீர் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்வார்” என்ற தகவலும் வெளியானது.

அதேசமயத்தில் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் பெறும் கடைசி நாள் நேற்று (27/05/24) முடிவடைந்துள்ளது. இந்நிலையில் தோனி, டெண்டுல்கர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ற பெயர்களில் போலி விண்ணப்பங்களுடன் கிட்டத்தட்ட 3000 விண்ணப்பங்களை பிசிசிஐ பெற்றுள்ளது. பிசிசிஐ மே 13ம் தேதி Google forms-ல் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களைப் பெறுவதாக அறிவித்திருந்தது. இதில் போலி விண்ணப்பங்களும் அனுப்பப்பட்டுள்ளன. முன்னாள் கிரிக்கெட் வீரர்களான எம்.எஸ்.தோனி, சேவாக், ஹர்பஜன் சிங், டெண்டுல்கர் போன்றோரது பெயர்கள் மட்டுமல்லாது அரசியல் தலைவர்களான பிரதமர் மோடி, அமித்ஷா போன்றோரது பெயர்களிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் காரணமாக இதில் உண்மையாகவே முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனரா என்பதைக் கண்டறிவதில் சிக்கல் எழுந்துள்ளது.

The post இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த பிரதமர் மோடி, அமித்ஷா? குழப்பத்தில் சிக்கி தவிக்கும் பிசிசிஐ appeared first on Dinakaran.

Tags : Modi ,Amit Shah ,BCCI ,New Delhi ,Google ,Sachin ,Dinakaran ,
× RELATED தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும்...