குஜராத்: ராஜ்கோட் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள டிஆர்பி விளையாட்டு மண்டலத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிறுவர்கள் உட்பட 27 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். குஜராத்தின் ராஜ்கோட்டில் டிஆர்பி விளையாட்டு மண்டலம் உள்ளது. கோடை கால விடுமுறை என்பதால் சிறுவர்கள் உட்பட ஏராளமானோர் அங்கு குவிந்திருந்தனர். அப்போது தற்காலிக கூடாரம் ஒன்றில் திடீரென தீப்பற்றியது. தீ இதர பகுதிகளுக்கும் பரவியது.
இதில் சிக்கிய சிறுவர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தையடுத்து டிஆர்பி விளையாட்டு மண்டலத்தின் உரிமையாளர் யுவ்ராஜ் சிங் சோலங்கி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ராஜ்கோட் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என குஜராத் முதலமைச்சர் அறிவித்துள்ளார். “ராஜ்கோட்டில் விளையாட்டு மண்டலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உடனடி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக மாநகராட்சி மற்றும் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சைக்கான ஏற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு குஜராத் அரசு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் வழங்கப்படும். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது” எனவும் பூபேந்திர படேல் தெரிவித்தார்.
தீ விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில், “ராஜ்கோட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் மிகவும் துயரமடைந்தேன். என் எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் உள்ளன. காயமடைந்தவர்களுக்காக பிரார்த்தனைகள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய உள்ளாட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.
The post ராஜ்கோட் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என குஜராத் முதலமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.