தொண்டி, மே 26: தொண்டி போலீஸ் ஸ்டேசனில் போதிய போலீசார் இல்லாததால் சட்டம் ஒழுங்கை சரி செய்வதில் கடும் சிரமம் அடைகின்றனர். அதனால் போதிய போலீசாரை நியமிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி போலீஸ் ஸ்டேசனில் போதிய காவலர்கள் இல்லை. கடந்த காலங்களில் 20 போலீசார் பணியில் இருந்தனர். பல்வேறு பணி காரணமாக எண்ணிக்கை குறைந்தது. மீண்டும் போலீசார் நியமிக்காமல் அதே நிலையே நீடித்தது.
தற்போது மக்கள் தொகையும் அதிகரித்து விட்டது. தொண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் தினமும் ஏதாவது ஒரு பிரச்னை நடக்கிறது. இதை சமாளிக்க போதிய காவலர்கள் கிடையாது. இதேபோல் திருவிழா காலங்களில் அனைத்து பகுதியிலும் ஒரே நேரத்தில் திருவிழா வைத்து விடுவதால் பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்படுகிறது. தற்போது உள்ள மக்கள் தொகை கணக்கின்படி 40 போலீசார் பணியில் இருக்க வேண்டும். ஆனால் 15க்கும் குறைவான போலீசாரே உள்ளனர்.
அதிலும் கோர்ட், பாரா உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு செல்வதால் மேலும் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதுபோன்ற நேரங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் சமாளிப்பது கடும் சிரமமாகி விடுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியது, போலீசார் பற்றாக்குறையால் விபத்து ஏற்பட்டால் கூட சம்பவ இடத்திற்கு வர கால தாமதம் ஏற்படுகிறது.
இதேபோல் காவல் நிலையத்திலும் புகார் கொடுக்க வருவோர் காத்திருக்க வேண்டியுள்ளது. அதனால் போதிய போலீசாரை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். போலீஸ் தரப்பில் கேட்டபோது, கடந்த காலத்தின் அடிப்படையில் போலீசார் எண்ணிக்கை உள்ளது. அதிலும் சிலர் பல்வேறு காரணங்களுக்காக வேறு இடம் சென்று விட்டனர். தற்போது உள்ள நிலைக்கு ஏற்ப கூடுதல் போலீசார் நியமித்தால் மட்டுமே அனைத்து பிரச்னைக்கும் உடனடி தீர்வு காண முடியும் என்றனர்.
The post தொண்டி போலீஸ் ஸ்டேசனில் கூடுதல் போலீசார் நியமிக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.