திண்டுக்கல், மே 26: திண்டுக்கல்லில் விளையாட்டு விடுதிக்கான மாநில அளவிலான பெண்கள் கால்பந்து வீரர்கள் தேர்வு நேற்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பள்ளியில் பயிலும் மாணவ,மாணவியர் விளையாட்டுத் துறையில் சாதனைகளை புரிவதற்கேற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
2024-2025ம் ஆண்டிற்கான விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான மாநில அளவிலான தேர்வு பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி மாவட்ட அளவிலான தேர்வு கடந்த 10ம் தேதி நடைபெற்று. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மாநில அளவிலான பெண்கள் கால்பந்து தேர்வு திண்டுக்கல்லில் நேற்றும், இன்றும் (மே 26) நடைபெறுகிறது. அதில் நேற்று 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவிகளுக்கும். இன்று 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவிகளுக்கும் தேர்வு நடைபெற உள்ளது.
நேற்று நடைபெற்ற தேர்வுக்கு மாநிலம் முழுவதும் இருந்து 30 மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை மண்டல முதுநிலை மேலாளர் நோயலின் தலைமையில், தேர்வுகுழு உறுப்பினர்களான நாமக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, கால்பந்து பயிற்சியாளர்கள் சத்யா, சத்தீஸ்குமாரி. கலைஅரசி, மில்சியா ஆகியோர் மாணவிகளை தேர்வு செய்தனர்.
The post திண்டுக்கல்லில் விளையாட்டு விடுதிக்கான மாநில அளவிலான பெண்கள் கால்பந்து வீரர்கள் தேர்வு appeared first on Dinakaran.