×

சிவகங்கை அருகே புதிய மாணவர் விடுதி கட்ட கோரிக்கை

சிவகங்கை, மே 25: சிவகங்கை அருகே மல்லல் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் 1 மேல்நிலைப்பள்ளி, உஞ்சனை மற்றும் அதிகரம் கிராமங்களில் 2 நடுநிலைப்பள்ளிகள் என 3 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மல்லல் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான தங்கும் விடுதி கட்டிடம் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இதனால் மாணவர்கள் பாதுகாப்பு கருதி தற்காலிமாக தனியார் கட்டிடத்துக்கு மாணவர் விடுதி மாற்றப்பட்டுள்ளது. இதே போல் சிவகங்கை திருப்பத்தூர் சாலையில் உள்ள பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதி பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக இங்கு தங்கியிருந்த மாணவர்கள் அனைவரும், தற்போது கலெக்டர் அலுவலக வளாகதத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவருக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விடுதியில் 142 மாணவர்கள் தங்கி படித்து வந்தனர். போதிய இடவசதி இல்லாததால், கடந்த 2023-24 கல்வியாண்டில் 60 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். இதனால் கிராமப்புற மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. மாணவர்கள் நலன் கருதி, சேதமடைந்த ஆதிதிராவிடர் பள்ளி விடுதி கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டிடங்கள் கட்டி தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post சிவகங்கை அருகே புதிய மாணவர் விடுதி கட்ட கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Adi Dravidar Welfare Department ,Mallal ,Unchanai ,Adhikaram ,Adi Dravidar Higher Secondary School ,Sivaganga ,Dinakaran ,
× RELATED ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம்...