×

உன்னத உறவுகள்

நன்றி குங்குமம் தோழி

தாய்ப்பால் காட்டும் உறவுகள்

பொதுவாக பெண் குழந்தைகள் என்றாலே அவர்களின் பாசம் அலாதியானது. இயற்கையிலேயே விட்டுக் கொடுக்கும் தன்மையும், அனைவரையும் ஒருமித்து அரவணைத்துப் போகும் குணமும் பெரும்பாலான பெண்களிடம் அமைந்திருக்கும். ஒரு சிறிய நான்கு வயது சிறுமி தன் இரண்டு வயது தம்பியை அழைத்துக் கொண்டு கடைத் தெருப்பக்கம் போய்க் கொண்டிருந்தாள். ஒரு பொம்மை கடையில் அழகழகான பொம்மைகள் தொங்கவிடப்பட்டிருந்தது. அதைக் கண்ட சிறுமியின் தம்பி தனக்கும் அந்த பொம்மை வேண்டுமென்று அடம்பிடிக்க ஆரம்பித்தான்.

அவன் அழஅழ, சிறுமிக்கு மனதில் இரக்கம் ஏற்பட்டது. எப்படியாவது அவனுக்கு அந்த பொம்மையை வாங்கித்தர நினைத்தாள். சிறுமி கடைக்காரரிடம் சென்று பொம்மையின் விலையைக் கேட்டாள். கடைக்காரர் ‘எட்டு அணா’ என்று சொல்ல, சிறுமியும் ‘தாருங்கள்’ என்றாள். ‘உன்னிடம் பணம் இருக்கிறதா’ என்று கடைக்காரர் கேட்க, சிறுமி தன் சட்டை பாக்கெட்டிலிருந்து நான்கு கிளிஞ்சல்களை எடுத்து கடைக்காரரிடம் தந்தாள். கடைக்காரர் கிளிஞ்சல்களை பெற்றுக் கொண்டு பொம்மையை சிறுமியிடம் தந்தார்.

சிறுமி தன் தம்பிக்கு மகிழ்ச்சியுடன் பொம்மையை தந்தாள். அவள் முகத்தில் பூரிப்பு தெரிந்தது. இவ்வளவு நேரம் இவற்ைறப் பார்த்துக் கொண்டிருந்த கடைக்கார பையன், கடைக்காரரிடம் “என்னய்யா விலையுயர்ந்த ஒரு அழகான பொம்மையை 4 கிளிஞ்சல்கள் பெற்றுக் கொண்டு கொடுத்து விட்டீர்களே! கடைக்கு இது நஷ்டமாகாதா?” என்றான். கடைக்காரர் சொன்னார் – “அந்த சிறுமி முகத்தைப் பார்த்தாயா, அவளே ஒரு சிறுமி, ஆனால் தம்பி கேட்டதும், தான் ஒரு அம்மா போலவும், தம்பிக்கு தன்னால் வாங்கித் தர முடியும் என்கிற நம்பிக்கையுடன் அவள் நடந்து கொண்ட விதமும் எனக்குள் அவளின் ஒரு தாய்ப்பாசத்தைக் காட்டியது.

‘எட்டு அணா’ நஷ்டத்தை நாம் எதில் வேண்டுமானாலும் ஈடுகட்டி விடலாம். ஆனால் தாய் போன்று பரிவு காட்டும் சிறுமியின் நம்பிக்கையை பாழடைக்க விரும்பவில்லை. அதனால் சிறுமியிடம் பொம்மையை நான்கு கிளிஞ்சல்களுக்கு விற்றேன்” என்று சொல்லி முடித்தார்.இது போல் நிறைய கதைகள் அக்கா, தம்பி பாசத்தை விளக்குவதாக இருந்தது ‘தாய்மை’ என்பது எதனுடனும் ஒப்பிட முடியாது. அதனால்தான் மனைவியைக் கூட தாய்க்குப்பின் தாரம் என்பார்கள். பிள்ளைகளிடையே பாச உணர்வை கதைகள் சொல்லி விளக்கினாலும், நடை முறை வாழ்க்கையில் காணப்படும் உதாரணங்கள் நம்மால் பார்க்கப்பட்டு, உணரப்படுகிறது.

குறிப்பாக, தாயை இழந்த குடும்பங்களில் அதிகமாக வேதனைப்படுவது தாயின் உடன் பிறந்தவர்களாகத்தான் இருக்க முடியும். ஒரு சிலர் பெற்றோரை இழந்து உறவினர் வீட்டில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். அவர்கள் கண்டிப்புடன் பாசத்தையும் காட்டி வளர்க்கும் போது அவர் உருவில் தாயை காண்பார்கள். அவர்களின் குழந்தைப் பருவம் தாயின் அரவணைப்பே கிடைக்கப் பெறாத சமயமாக இருந்ததால், அவர்களின் பிள்ளைகளுக்கு அந்த தாயின் அன்பு அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று பாசத்தை ஊட்டி வளர்ப்பார்கள்.

தாயைப் போன்ற அரவணைப்பு உறவினர்களிடம் கிடைத்தாலும் யாருமே தாயாக ஆகி விட முடியாது. உறவுகளுக்குள்ளான நெருக்கமே இப்பொழுது குறைந்து விட்டது. கூட்டுக் குடும்பங்களும் காணாமல் போய் விட்டது. சொந்த பந்தங்கள் பெயரளவில் நிறையபேர் இருந்தாலும் என்றோ ஒரு நாள் சந்திக்கிறோம். உடன் பிரிந்து விடுகிறோம். சில சமயங்களில் பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் என்று கூட மற்றவர் குடும்பத்துக்குத் தெரியாமல் போகிறது. அப்படியானால் பாசமும் பந்தமும் எப்படி ஒட்டிக் கொள்ளும்.

இன்றைய காலகட்டம் நம் கையில் இல்லவேயில்லை. இவற்றை நம் பாரம்பரியத்தை கொஞ்சமாவது அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லாவிடில், நம் கலாச்சாரமே மாறிவிடுமே! பணத்திற்காக, சொத்திற்காக நடைபெறும் பூசல்களிடையே, இந்தப் பாசபிணைப்பும் அறுந்து விட்டால் என்னாவது? நேற்று இருப்பவர் இன்று இருப்பதில்லை. கேட்கும் போது மாயம் போலதான் தோன்றும். இதிகாசம், புராணங்களை இளைஞர்களிடையே கொண்டு செல்ல பலப்பல யுக்திகளை கையாள்கிறோம். இலக்கியங்களை வளர்க்கப் பாடுபடுகிறோம். நம் உறவுப்பாலங்களையும் பாச பந்தத்தையும் வளர்க்கவும் நம்மால் முடிந்ததை செய்வோமே!

ஒரு பெண்ணுக்கு திருமணமாகி பத்தாண்டுகள் வரை குழந்தை பிறக்கவில்லை. அவளின் தங்கை சிறியவளுக்கு இரண்டு பெண்கள். சிறிய பெண் பிறந்தவுடனேயே,
அக்குழந்தையை அவள் அக்காவிற்கு தந்துவிட்டாள். குழந்தையில்லாத அக்கா, சந்தோஷமாக அக்குழந்தையை வளர்த்தாள். பெற்ற தாயாகவே பாசத்தையெல்லாம் கொட்டி வளர்த்தாள். குழந்தையும் அவர்களை அப்பா, அம்மா என்றுதான் நினைத்து உண்மையில் வளர்ந்தது.

பெற்ற அம்மாவை சித்தியாகவே பாவித்தது. ‘தத்து’ எடுத்துக் கொண்ட பெண்ணிற்கு ஐந்து வயது ஆகும் பொழுது, அக்காவிற்கு முதல் ஆண் குழந்தை பிறந்தது. தனக்குக் குழந்தை கிடைத்ததால், அக்கா-தங்கை குழந்தையை விடவில்லை. பாசமும் குறையாமல் அதிகரித்தது. காரணம், தங்கையின் பெண் குழந்தை வந்த ராசிதான் தனக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை வாரிசு கிடைத்ததாக பெருமிதம் கொண்டாள். அதனால் தன் குழந்தையிடம் காட்டிய பரிவைவிட, பெண் குழந்தையிடம் அதிக அக்கறை எடுத்துக் கொண்டாள்.

அழகான பெண்ணாக அவளும் வளர்ந்தாள். என்ன வெல்லாம் அவள் படிக்க ஆசைப்பட்டாளோ, அனைத்தையும், வெளிநாட்டுக் கல்வி உட்பட அளித்தாள். சமீபத்தில்
அப்பெண்ணுக்கு திருமணமும் செய்து வைத்தார்கள். ஒரு ராஜகுமாரியின் திருமணம் எவ்வளவு சிறப்பாக இருக்க முடியுமோ, அவ்வளவு சிறப்பாக ஊரே ஒன்று கூடினாற்போல் நடந்தேறியது. இதற்கிடையில் தங்கையின் குடும்ப வாழ்வில் பிரச்னை ஏற்படவே, அவளும் அக்காவிடம் குழந்தையைக் கொடுத்தது நல்லதுதான் என்று நினைத்துவிட்டாள்.

பாசம் காட்டும் உறவுகள் என்றால், நம்மால் அவர்களை வகைப்படுத்த முடியாது. சமய சந்தர்ப்பங்கள் வரும் பொழுது நமக்கே அது புரிந்து விடும். இவர்கள் இப்படித்தான் என்று நினைக்காமல் நம்மிடம் இருக்கும் பாச உணர்வை என்றும் பிறருக்குக் காட்டும் பொழுது அவர்கள் மனம் குளிர்கிறது. மனதளவில் நம்மை வாழ்த்தும் போது, கண்டிப்பாக நாம் உயர்வோம். சிறுவயதில் நம்மை வளர்க்கப் பாடுபடும் உறவுகளை, வயதான பின் நாம் ஏன் அரவணைக்கக் கூடாது? காலத்தின் கட்டாயம் இயந்திரமயமான வாழ்க்கைதான் ஒவ்வொருவருக்கும் இருப்பினும், பெரியவர்களைப் பார்த்து ‘சாப்பிட்டீர்களா’ என்கிற ஒரு வார்த்தையை கேட்டுப் பார்த்தால் புரியும். யாரும் நம் பணத்திற்கோ, பொருட்களுக்கோ ஏங்குவதில்லை. அன்பான வார்த்தைகள்தான் தேவை! வருடங்கள் ஆனாலும், உறவுகளின் பாசம் நமக்குத் தாய், தந்தையையே காட்டி விடுகிறது.

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீ நிவாசன்

The post உன்னத உறவுகள் appeared first on Dinakaran.

Tags : kumkum dothi ,Dinakaran ,
× RELATED ஷாம்பு எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள்!!