×

நியூஸ் பைட்ஸ்

நன்றி குங்குமம் தோழி

சுய திருமணம்

சமீப நாட்களில் தங்களைத் தாங்களே திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. கடந்த 2014ம் வருடம் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி சுய திருமணம் செய்துகொண்டார். இதுதான் இணையத்தில் வைரலான முதல் சுய திருமணம். இதற்குப் பிறகு 2017ம் வருடம் இத்தாலியைச் சேர்ந்த ஒரு பெண் சுய திருமணம் செய்துகொண்டதோடு, தேன் நிலவுக்கும் சென்று வைரலானார். 2021ம் வருடம் ஃபிரான்ஸைச் சேர்ந்த ஒரு பெண் சுய திருமணம் செய்த சில நாட்களிலேயே, சுய விவாகரத்தும் செய்துகொண்டது பெரும் வைரலானது.

கடந்த 2022ம் வருடம் இந்து மதத்தின் அனைத்து சடங்குகளுடன், குஜராத்தைச் சேர்ந்த பிந்து என்ற பெண் சுய திருமணம் செய்துகொண்டார். இதுதான் இந்தியாவில் நடந்த முதல் சுய திருமணம். இப்படி நிறைய சுய திருமணங்கள் நடந்திருந்தாலும், கடந்த வாரம் நடந்த ஒரு சுய திருமணம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. ஆம்: கடந்த வாரம் தன்னையே
திருமணம் செய்துகொண்டார் பாப் இசையுலகின் இளவரசியான பிரிட்னி ஸ்பியர்ஸ். ‘‘இது உங்களுக்கு சங்கடத்தை தரலாம் அல்லது முட்டாள்தனமாகத் தெரியலாம். ஆனால், என்னையே நான் திருமணம் செய்துகொண்டதுதான் என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய புத்திசாலித்தனமான செயல்…’’ என்று சுய திருமணத்தையொட்டி சமூக வலைத்தளத்தில் பிரிட்னி ஸ்பியர்ஸ் இட்ட இந்த பதிவுதான் இப்போது செம வைரல்.

முதல் பெண் எழுத்தாளர்

இந்த வருடத்தின் இலக்கியத்துக்கான நோபல் பரிசைத் தன்வசமாக்கியிருக்கிறார் ஹான் காங். தென்கொரியாவைச் சேர்ந்த ஹான் காங்தான், இலக்கியத்துக்காக நோபல் பரிசு வாங்கிய முதல் ஆசியப் பெண் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மட்டுமல்ல, நோபல் பரிசு வாங்கிய பிறகு ஹான் காங்கின் புத்தகங்கள் தென்கொரியாவில் மட்டும் 10 லட்சம் பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன. மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு புத்தகங்கள்
விற்பனையாவது ஒரு சாதனை. மட்டுமல்ல, விற்பனை 20 லட்சம் பிரதிகள் வரை சென்றுகொண்டிருக்கிறது. இந்த விற்பனையின் மூலமும் ஹான் காங்கிற்கு பெருந்தொகை கிடைத்திருக்கும்.

உலகின் சிறிய விமானம்

ஸ்காட்லாந்தில் ஆர்க்னி மற்றும் பாபா தீவுகளுக்கு இடையிலான தூரம் 2.73 கிலோ மீட்டர். ஆர்க்னி தீவிலிருந்து பாபாவிற்குச் செல்வதற்காக புதிய விமான சேவையை ஆரம்பித்திருக்கின்றனர். இதற்காக உலகிலேயே சிறிய விமானத்தை வடிவமைத்திருக்கின்றனர். மட்டுமல்ல, உலகிலேயே வேகமான விமானமும் இதுதான். ஆம்; பயண தூரத்தை 1 நிமிடம், 14 விநாடிகளில் எட்டிவிடுகிறது இந்த விமானம். நல்ல திறமையான விமானிகள் 53 விநாடிகளிலே பயண தூரத்தை அடைந்துவிடுகின்றனர். இந்த விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவுகள் குவிந்து வருகின்றன.

வைரல் வீடியோ

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று செம வைரலாகி பார்வைகளை அள்ளி வருகிறது. அந்த வீடியோவில் துபாயில் உள்ள பாலைவனத்தில் ஓர் இளம் பெண் மாட்டிக்கொள்கிறார்.
நகரத்துக்குள் செல்வதற்காக ஊபர் ஆப்பில் வாகனங்களைத் தேடும்போது, ஒட்டகச் சேவை இருப்பது தெரிய வருகிறது. பயணக் கட்டணம் இந்திய மதிப்பு 1,163 ரூபாய் என்று காட்டுகிறது. அந்தப் பெண் ஓட்டகத்தைப் புக் செய்கிறார். பெண் இருக்கும் இடத்துக்கு ஒட்டகத்தை ஒருவர் கொண்டு வருகிறார். பிறகு ஓட்டகத்தில அப்பெண்ணை ஏற்றிக்கொண்டு, அவர் நடந்து செல்கிறார். இதுதான் அந்த வீடியோ. உண்மையில் ஊபரில் ஒட்டகச் சேவையும் வந்துவிட்டதா என்று நெட்டிசன்கள் வியந்து அந்த வீடியோவைப் பார்த்து வருகின்றனர்.

சிங்கப்பெண்

உலகின் குறிப்பிடத்தக்க இளம் இயற்கை ஆர்வலர் மற்றும் காட்டுயிர் பாதுகாவலராக வலம் வருபவர், ஃப்ரேயா. இன்ஸ்டாவில் இவரை 13 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். சமீபத்தில் காட்டுக்குள் தனியாக தவித்துக்கொண்டிருந்த மூன்று சிங்கக்குட்டிகளைக் கண்டெடுத்து, அவற்றுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறார். விரைவிலேயே அந்த சிங்கக்குட்டிகளுக்கு உரிய இடமான ஆப்பிரிக்க காட்டில் கொண்டு சேர்ப்பதாக சொல்லியிருக்கிறார் ஃப்ரேயா. அந்த மூன்று சிங்கக்குட்டிகளுடன் ஃப்ரேயா இருக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இன்ஸ்டாவில் பார்வைகளை அள்ளி வருகிறது.

தொகுப்பு: த.சக்திவேல்

The post நியூஸ் பைட்ஸ் appeared first on Dinakaran.

Tags : kumkum ,England ,
× RELATED பெண்ணாதிக்கம் என்பது பெண் சுதந்திரமல்ல…