×

வாரன்ட் இருந்தால் மட்டுமே கட்டணமின்றி பயணிக்கலாம்; பஸ்சில் போலீசாருக்கு இலவச பயணம் கிடையாது: போக்குவரத்து துறை தகவல்

சென்னை: வாரன்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும் என்றும் மற்ற அனைத்து நேரத்திலும் டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும் என்றும் போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் செட்டிக்குளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி, தான் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது என கூறி நடத்துனரிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது அவர், ‘‘உங்கள் (போக்குவரத்து துறை) பணியாளர்களுக்கு மட்டும் இலவச பயணம் கொடுக்கிறீர்கள். நாங்களும் அரசு ஊழியர்கள் தான். ஏன் எங்களுக்கு கிடையாது’’ என கூறி வாக்குவாதம் செய்தார். இந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில் காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: காவலர்கள் பேருந்தில் பயணிக்கும்போது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும். கைதிகளை அழைத்து செல்லும் போது அதுவும் வாரன்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்த தொகையும் போக்குவரத்து துறை சார்பில் கிளைம் செய்து கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தின் போது பேருந்து நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் ெதரிவித்தனர்.

The post வாரன்ட் இருந்தால் மட்டுமே கட்டணமின்றி பயணிக்கலாம்; பஸ்சில் போலீசாருக்கு இலவச பயணம் கிடையாது: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Transport Department ,CHENNAI ,Nagercoil Chettikulam Workshop ,Tirunelveli ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED பழைய பஸ் பாஸிலேயே மாணவர்கள் பயணிக்கலாம்: போக்குவரத்து துறை தகவல்