×

நோட்டு மற்றும் பாடப்புத்தகங்களை 31ம் தேதிக்குள் பள்ளிகளுக்கு விநியோகிக்க வேண்டும்: பள்ளி கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தல்

சென்னை: நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கான நோட்டு மற்றும் பாடப்புத்தகங்களை வரும் 31ம் தேதிக்குள் பள்ளிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம்: 2024-25ம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவற்றை விநியோக மையங்களில் இருந்து, வரும் 31ம் தேதிக்குள் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் இருந்து இவ்வியக்கத்திற்கு அனுப்பப்பட்ட தேவைப்பட்டியலின் அடிப்படையில் நோட்டுப்புத்தகம் மற்றும் பாடப்புத்தகங்களின் எண்ணிக்கை பெறப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். அதேநேரத்தில் பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் பெறப்பட்ட விவரத்தினை இருப்புப் பதிவேட்டில் உரிய அலுவலர்களால் உரிய பதிவுகள் மேற்கொண்ட பின்பு பள்ளிகளுக்கு வழங்கப்படும் போதும், வழங்கப்பட்ட விவரத்தினை பதிவேட்டிலும் பதிவு செய்ய வேண்டும். பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் பள்ளிகளுக்கு தேவையான அளவில் பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கையொப்பம் பெற்று அலுவலக கோப்பில் பராமரிக்க வேண்டும்.

விநியோக மையங்களில் இருந்து பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் தேவைப்பட்டியலின் அடிப்படையில் வழங்கப்படுகிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். கோரப்பட்ட தேவைப் பட்டியலை விட கூடுதல் அல்லது குறைவாக இருந்தால் இயக்ககத்திற்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட வேண்டும். பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் வரை பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பள்ளித் திறக்கப்படும் நாளன்று மாணவர்களுக்கு உரியமுறையில் பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

The post நோட்டு மற்றும் பாடப்புத்தகங்களை 31ம் தேதிக்குள் பள்ளிகளுக்கு விநியோகிக்க வேண்டும்: பள்ளி கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Director of ,CHENNAI ,Director of School Education ,of ,Dinakaran ,
× RELATED டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு...