×

காஞ்சிபுரம் அருகே நில அளவை ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நில அளவை ஆய்வாளர் வீட்டிலும் அவரது மைத்துனர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். ஊட்டியில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் அடுத்த ஆற்பாக்கம் மேட்டுகாலனி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (46). காஞ்சிபுரம், நாகப்பட்டினம், ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நில அளவை ஆய்வாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இந்து சமய அறநிலையத்துறை நில அளவை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாஸ்கர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், ஆவடி பகுதிகளில் நில அளவை ஆய்வாளராக பணியாற்றிய போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், நில அளவை ஆய்வாளர் பாஸ்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று காலை ஆற்பாக்கத்தில் உள்ள பாஸ்கர் வீடு மற்றும் அவரின் மைத்துனர் மாண்பரசு வீடு ஆகிய 2 இடங்களில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை மற்றும் கீதா ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று நில அளவை ஆய்வாளர் பாஸ்கர் தற்போது பணியாற்றி வரும் ஊட்டியில் உள்ள வீட்டிலும் அப்பகுதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் காஞ்சிபுரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post காஞ்சிபுரம் அருகே நில அளவை ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Anti-corruption department ,Kanchipuram ,Ooty ,Dinakaran ,
× RELATED இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் ரூ.3.80...