×

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் அவதரித்த ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாக திருவிழா வசந்த விழாவாக கடந்த 13ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான விசாக திருவிழா இன்று மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது.

இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்ந்தார். மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகிறது.

விசாகத்தை முன்னிட்டு சில நாள்களாவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் விரதமிருந்து, பாதயாத்திரையாக வந்ததால் கோயில் வளாகம் நிரம்பி வழிகிறது. நேற்று மாலை முதலே கூட்டம் அலைமோதுகிறது. ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குத்தியும், பால்குடம் மற்றும் அங்கப்பிரதட்சணை மற்றும் அடிப்பிரதட்சனம் செய்தும் இன்று நேர்த்தி கடனை செலுத்தினர். ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக கூடுதலான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் வாகன நிறுத்தம், குடிநீர், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் தலைமையிலான போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

The post அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Thiruchendur Murugan Temple ,Arupadai ,Vaikasi Visakha festival ,Tiruchendur ,Swami ,Tiruchendur Subramanya Swamy Temple ,Lord ,Muruga ,Tiruchendur Murugan Temple ,
× RELATED மோடி தியானத்தால் குமரியில் கெடுபிடி...