×

பேரையூர், சேடபட்டி, டி.கல்லுப்பட்டி பகுதியில் 200 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம்

*விவசாயிகள் வேதனை

பேரையூர் : பேரையூர், சேடபட்டி, டி.கல்லுப்பட்டி பகுதியில் 200 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, சேடபட்டி, டி.கல்லுப்பட்டி, பேரையூர், பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக நெற்பயிர்கள் அறுவடை பருவத்தில் மழைத் தண்ணீரில் சாய்ந்து மூழ்கி விட்டது. மேலும் நிலத்தில் சாய்ந்த நெல்மணிகள் முளைத்துப் போய் நெல் நாற்றுகளாக மாறி வருகிறது.

சில இடங்களில் நீரில் மூழ்கியதால் நெற்பயிர்களை இயந்திரம் மூலம் அறுவடை செய்ய முடியாத சூழல் உருவாகி உள்ளது. மேலும் விளைந்த நெற்பயிர்களை கூலியாட்கள் மூலம் அறுவடை செய்து டிராக்டர்களில் கொண்டு சென்று நெற்களம் மற்றும் பாறைகளில் நெற்பயிர்களை உலர வைக்கின்றனர். பேரையூர், சந்தையூர், எஸ். மேலப்பட்டி, எஸ்.கீழப்பட்டி, மங்கல் ரேவு, டி.கல்லுப்பட்டி, சேடபட்டி, சின்னக்கட்டளை, அல்லிகுண்டம், அ.பெருமாள் கோவில்பட்டி, பெரிய கட்டளை, அதிகாரிபட்டி, ஏ.கிருஷ்ணாபுரம், உள்ளிட்ட பகுதியிலுள்ள 200 ஏக்கருக்கும் மேற்பட்ட அக்சயா, அன்னம், பால் ஒட்டு உள்ளிட்ட ரக நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியும், நிலங்களில் சாய்ந்தும், முளைத்தும் சேதமடைந்துள்ளது.

இதனால் விவசாயிகள் பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இது குறித்து அ.பெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் கூறும்போது, நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி முளைப்பாரி போல் முளைத்துப் போயுள்ளது. இந்நிலைமையில் நெல் நடவு செய்து இதுவரை விளைவித்த மீதமுள்ள நெற்பயிர்களை அறுவடை செய்தால் உழுத கூலி கூட கிடைக்காது என்றார்.

இது குறித்து விவசாயி வேல்முருகன் கூறும்போது, சென்றமுறை மழையின்றி பயிர்கள் அனைத்தும் கருகிப்போனது, இந்த முறை அறுவடை நேரத்தில் நெற்பயிர்கள் அனைத்தும் மழைநீரில் சாய்ந்து வீணாகிப் போனது. இது குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கீடு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்கி உதவ வேண்டும் என்று கூறினார்.

The post பேரையூர், சேடபட்டி, டி.கல்லுப்பட்டி பகுதியில் 200 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம் appeared first on Dinakaran.

Tags : Peraiyur ,Sedapati ,D. ,Kalubandi ,Vedenai Peraiur ,Kalupatti ,Madurai District ,Peraiyur Taluga ,Sedapati, D. ,Kallupati ,Dinakaran ,
× RELATED டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில்...